2015-01-17 14:37:00

பிலிப்பீன்சின் தக்லோபானில் திருத்தந்தை பிரான்சிஸ்


சன.17,2015. பிலிப்பீன்ஸ், தென்கிழக்கு ஆசியாவில், மேற்கு பசிபிக் பெருங்கடலில் 7,107 தீவுகளைக் கொண்டுள்ள ஒரு நாடு. இந்நாடு, பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ளதாலும், நில நடுக்கோட்டுக்கு அண்மையில் உள்ளதாலும், நிலநடுக்கங்களும் கடும் புயல்களும் அடிக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இந்நாட்டில் அதிகமாக உள்ளன. இந்த இயற்கையின் சீற்றத்தை இச்சனிக்கிழமையன்று பிலிப்பீன்சில் உணர முடிந்தது. பிலிப்பீன்சில் திருத்தூதுப் பயணத் திட்டங்களை நிகழ்த்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 8.15 மணிக்கு மனிலாவிலிருந்து விமானத்தில் Leyte தீவுக்குச் சென்றார். 650 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி 15 நிமிடங்கள் பயணம் செய்து அத்தீவின் முக்கிய நகரங்களில் ஒன்றான தக்லோபான் அடைந்தார். ஆனால் அந்நாட்டு வானிலை அறிக்கையின்படி இன்று இத்தீவில் கடும் புயல் அடிக்கும் என விமான ஓட்டுனர்கள் எச்சரித்தனர். அதிலும் மதியம் ஒரு மணிக்குமேல் புயலின் வேகம் அதிகரிக்கும், விமானப் பயணம் கடினம் என்று கூறியதால் இந்நகரில் திருப்பலியை நிறைவேற்றிய பின்னர் பிற்பகலில் மனிலா வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆனால் பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் மற்றும் அதிகாரிகள் சென்ற விமானம் தக்லோபான் நகரில் இறங்கியபோதே கொஞ்சம் சறுக்கி நின்றது. யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இந்த விபரங்களை மனிலாவிலிருந்து பேசுகிறார் மரியின் ஊழியர் சபை அருள்சகோதரி கென்சி.

பிலிப்பீன்ஸ் நாட்டின் புவியியல் அமைப்பின்படி Luzon, Visayas, Mindanao ஆகிய மூன்று முக்கிய தீவுக் கூட்டங்களாக இந்நாடு பிரிக்கப்பட்டுள்ளது. இச்சனிக்கிழமையன்று கன மழையையும் Mekkhala புயலையும் அனுபவித்த Leyte தீவு, Visayas தீவுக் கூட்டங்களில் ஒன்றாகும். இந்நாளில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் அடித்த காற்றால் Leyte தீவுக்குச் செல்லவேண்டிய கப்பல்கள் செல்லவில்லை. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அங்கு செல்லவிருந்த ஆயிரக்கணக்கான மக்களாலும் அங்கு செல்ல இயலவில்லை. இச்சனிக்கிழமையன்று கன மழையுடன் Mekkhala புயல் வீசிய இதே Leyte தீவும், தக்லோபான் நகரமும்தான்  2014ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியும் ஹையான் கடும் புயலால் கடுமையாய்த் தாக்கப்பட்டன. ஏழு மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பி கடும் சேதத்தை விளைவித்தன. இப்பகுதியில் இதுவரை இடம்பெற்ற கடும் புயல் இது என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஹையான் கடும் புயலில் தக்லோபான் நகரின்  ஏறக்குறைய 90 விழுக்காடு அழிந்தது. Leyte தீவின் ஆறு மாநிலங்கள் மற்றும் 44 மாவட்டங்களில் ஒரு கோடியே 45 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டனர். ஏறக்குறைய பத்து இலட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர்.

ஹையான் கடும் புயல் வீசி 14 மாதங்கள் கழித்து, பிலிப்பீன்ஸ்க்கு மூன்று நாள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹையான் புயலில் கடுமையாய்ப் பாதிப்படைந்த மக்களை நேரில் கண்டு தனது அன்பைத் தெரிவிப்பதற்கு மிகவும் ஆவல்கொண்டு தனது பயணத் திட்டங்களில் முக்கியமானதாக தக்லோபான் செல்வதைக் குறித்திருந்தார். அத்திட்டத்தின்படி சனவரி 17, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்குத் திருப்பலி நிகழ்த்தினார். ஆனால் மோசமான வானிலை காரணமாக திருப்பலியை வேகமாக முடிக்க வேண்டியிருந்தது. கொட்டும் மழையில் பல்லாயிரக்கணக்கான விசுவாசிகள் மஞ்சள் நிறத்தில் மழைப்பாகையை அணிந்துகொண்டு திருப்பலியில் பக்தியோடு பங்கெடுத்தனர்.  திருத்தந்தையும் மஞ்சள் நிறத்தில் மழைப்பாகை அணிந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினார். இத்திருப்பலிக்கென ஏற்கனவே ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டிருந்த மறையுரையை வழங்காமல் இஸ்பானிய மொழியில் சுருக்கமாக தனது உள்ளத்துணர்வுகளை மக்களோடு பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. அவர் இஸ்பானிய மொழியில் சொல்லச் சொல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பும் நடைபெற்றது.

தக்லோபான் நகரில் நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில், அம்மக்களுக்காகச் செபித்து ஆசீர் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கன மழையையும் பொருட்படுத்தாது இத்திருப்பலியில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் விசுவாசம் பெரிதே. இத்திருப்பலிக்குப் பின்னர், அங்கிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பாலோ பேராயர் இல்லத்தில் ஹையான் புயலில் கடுமையாய்ப் பாதிப்படைந்த 30 குடும்பங்களுடன் திருத்தந்தை மதிய உணவு அருந்துவதாகப் பயணத் திட்டத்தில் இருந்தது. கன மழை புயல் காரணமாக இந்நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டது. இம்மக்களுக்கு பாலோவில் வத்திக்கானின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் மையத்தைத் திருத்தந்தை ஆசீர்வதிக்கவேண்டியிருந்தது. அந்நிகழ்வும் இரத்துச் செய்யப்பட்டது. மாலை 3.30 மணிக்கு பாலோ பேராலயத்தில் ஆயர்கள், குருக்கள், துறவிகள், குருத்துவ மாணவர்கள் மற்றும் ஹையான் புயலில் பாதிப்படைந்த குடும்பத்தினரைத் திருத்தந்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்நிகழ்வை இத்திருப்பலிக்குப் பின் சுருக்கமாக நடத்தினார் திருத்தந்தை. பாலோ பேராலயத்தில் அனைவரையும் ஆசீர்வதித்து, பாதுகாப்பாக மனிலா வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறன்று மனிலா புனித தாமஸ் பல்கலைக்கழகத்தில் பல்சமய மற்றும் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களைச் சந்தித்தல், பின்னர் இளையோரைச் சந்தித்தல், மனிலா ரிசால் பூங்காவில் திருப்பலி நிறைவேற்றல் ஆகிய மூன்று நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. வருகிற திங்கள் காலை 10 மணிக்கு பிலிப்பீன்ஸ் மக்களிடமிருந்து விடைபெற்று உரோமைக்குப் புறப்படுவார் திருத்தந்தை. பிலிப்பீன்ஸ் விமானத்தில் 14 மணி 40 நிமிடங்கள் பயணம்செய்து திங்கள் மாலை 5.40 மணிக்கு உரோம் சம்ப்பினோ விமான நிலையம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ் என எதிர்பார்க்கப்படுகிறது..

இத்திருத்தூதுப் பயணம் பற்றி அருள்சகோதரர் பிரேம் ஆனந்த் பார்த்திபன் அவர்கள் மனிலாவிலிருந்து தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார். இவர் ல சாலே பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

மேலும், “இறைவனின் பாடுகளும், அவர் நம்மோடு துன்பப்படுவதும், நம் போராட்டங்களுக்கும் வேதனைகளுக்கும் அர்த்தமும் மதிப்பும் கொடுக்கின்றன” என்ற வார்த்தைகளை இந்நாளில் தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.