2015-01-17 14:46:00

திருத்தந்தை–இயேசு நம்மை ஒருபோதும் சோர்வடைய விடமாட்டார்


சன.17,2015. பிலிப்பீன்சின் தக்லோபான் விமான நிலைய வளாகத்தில் கடந்த ஆண்டில் ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிறைவேற்றிய திருப்பலியில் இஸ்பானிய மொழியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரை. அங்கு புயலடித்ததால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஆங்கில மறையுரையை திருத்தந்தை வழங்கவில்லை.

நம் பலவீனங்களோடு நம்மைத் தாங்கும் வல்லமையுள்ள  மாபெருந் தலைமைக் குரு ஒருவரை நாம் கொண்டிருக்கிறோம். இயேசு நம்மைப் போன்றவர். இயேசு நம்மைப் போல் வாழ்ந்தார், பாவம் தவிர எல்லாவித்திலும் நம்மைப் போல் இருந்தார். அவர் பாவி அல்ல. அவர் பாவத்துக்குத் தம்மை ஆளாக்கினார் என்று புனித பவுலடிகளார் சொல்கிறார். இயேசு எப்போதும் நமக்கு முன்னால் செல்கிறார். நாம் சிலுவைத் துன்பத்தை அனுபவிக்கும்போது அவர் நமக்கு முன்னே செல்கிறார். ஹையான் புயல் தாக்கிய பதினான்கு மாதங்களுக்குப் பின்னர் இன்று இவ்விடத்தில் நாம் இருக்கிறோம் என்றால், இயேசு நமக்கு முன்னால் இங்கு இருக்கிறார் என்ற விசுவாசத்தில் நாம் பலவீனமடையவில்லை என்பதே. இயேசு தம் பாடுகளில் நம் வேதனைகள் அனைத்தையும் ஏற்றார். எனவே அவர் நம்மைப் புரிந்துகொள்ளும் வல்லமை படைத்திருக்கிறார் என்று இத்திருப்பலியின் முதல் வாசகத்தில் நாம் கேட்டோம்.

எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமான ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உரோமையில் இந்த ஹையான் புயலின் கடும் சேதங்களைப் பார்த்தபோது நான் இங்கு இருப்பதற்கு விரும்பினேன். அந்த நாள்களிலே இங்கு நான் வர விரும்பினேன். சிறிது தாமதமாக வந்தாலும் நான் இப்போது உங்களோடு இருக்கிறேன். இயேசுவே ஆண்டவர் என்பதைச் சொல்வதற்காக இங்கு வந்துள்ளேன். அவர் ஒருபோதும் நம்மைச் சோர்வுறவிடமாட்டார், நம்மை விழத்தாட்டமாட்டார். ஆனால் தந்தையே, எனது வீடு, வாழ்வாதாரங்கள் என பல பொருள்களை நான் இழந்துவிட்டேன், அதனால் மனம் சோர்ந்துள்ளேன் என்று நீங்கள் சொல்லலாம். இப்படி நீங்கள் சொன்னால் அது உண்மையே, உங்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆயினும் சிலுவையில் அறையுண்ட இயேசு இங்கிருக்கிறார். இதிலிருந்து அவர் நம்மை சோர்வுறவிடமாட்டார். நாம் அனுபவிக்கும் அனைத்துத் துன்பங்களையும் அவர் அனுபவித்துள்ளார். இயேசுவே ஆண்டவர். நம் வாழ்வின் இன்னல் நிறைந்த நேரங்களில் நம்மோடு கண்ணீர் சிந்தி  நம்மோடு நடக்கும் ஆண்டவரை நாம் கொண்டிருக்கிறோம். உங்களில் பலர் எல்லாவற்றையும் இழந்துள்ளீர்கள். என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஆயினும் உங்களுக்கு என்ன சொல்ல வேண்டுமென்பதை இயேசு அறிந்திருக்கிறார். உங்களில் பலர் உங்கள் குடும்பங்களில் ஒரு பகுதியினரை இழந்துள்ளீர்கள். அமைதியாக இருந்து எனது அமைதியான இதயத்துடன் உங்களோடு இருப்பதை மட்டுமே என்னால் செய்ய முடியும். ஆண்டவரே, இத்துன்பம் ஏன் என உங்களில் பலர் கேட்கலாம். உங்கள் ஒவ்வொருவரின் இதயத்திடமும், கிறிஸ்து சிலுவையிலிருந்து தம் இதயத்தோடு பதில் சொல்கிறார். இதற்குமேல் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. கிறிஸ்துவை நோக்குவோம். அவர் ஆண்டவர். அவரது சிலுவையருகில் அவரின் தாய் நிற்கிறார். நாம் அதிகத் துன்பங்களை அனுபவிக்கும் நேரங்களில் சிறு குழந்தைகள்போல் நாம் இருக்கிறோம். அச்சமயங்களில் நாம் எதையும் புரிந்துகொள்வதில்லை. “மம்மி” என்று தாயின் கரங்களை மட்டுமே நாம் பிடித்துக்கொண்டிருக்க முடியும். குழந்தை பயப்படும்போது மம்மி என்று சொல்கிறது. நம் துன்ப நேரங்களில் “மம்மி” என்ற வார்த்தையை மட்டுமே நம்மால் சொல்ல முடியும். சிலுவையடியில் மௌனமாக நின்ற தாயை உற்று நோக்குவோம். சிறு குழந்தை போல, அத்தாயிடம், அம்மா எனச் சொல்வோம். நமக்கு ஒரு தாய் இருக்கிறார். மாபெரும் சகோதரர் இயேசு இருக்கிறார். நாம் தனியாக இல்லை. பேரிடர் துன்ப நேரங்களில் பல சகோதரர்கள் உதவி செய்வதற்கு வந்தார்கள். ஏனெனில் நாம் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகளாக உணருகிறோம். இதுவே எனது இதயத்தில் தோன்றியவை. வேறு எதுவும் சொல்லாமல் விட்டிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இயேசு ஒருபோதும் நம்மைச் சோர்வுறவிடமாட்டார் என்பதை தயவுகூர்ந்து அறிந்திருங்கள். அன்னைமரியாவின் கனிவு உங்களைச் சோர்வுறவிடாது என்பதையும் அறிந்திருங்கள். அன்னைமரியாவையும், இயேசுவையும் பற்றிக்கொண்டு சகோதர சகோதரிகளாக ஆண்டவரில் ஒன்றிணைந்து நடப்போம்.

இவ்வாறு இம்மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.