2015-01-16 15:59:00

ஆசியாவில் நற்செய்தி அறிவிக்க புதிய பாதைக்குத் தயாராகுங்கள்


சன.16,2015. மனிலா அமலமரி பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், மற்றும் துறவிகளுடன் திருப்பலி நிறைவேற்றி மறையுரையும் ஆற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?.. என் ஆடுகளைப் பேணிவளர்” (யோவா. 21,15-17) என்று இயேசு பேதுருவிடம் கூறியதை இந்நாளைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். இந்த வார்த்தைகள் நமக்கு முக்கியமான ஒன்றை நினைவுபடுத்துகின்றன. அனைத்து மேய்ப்புப்பணிகளும் அன்பில் பிறப்பவை. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு அனைத்தும் கிறிஸ்துவின் ஒப்புரவாக்கும் அன்பின் அடையாளம். உங்கள் அனைவரையும் பாசத்தோடு வாழ்த்தும் இந்நேரத்தில் இன்று இங்கு வரஇயலாமல் இருப்பவர்கள், இன்னும் வயதான மற்றும் நோயாளிச் சகோதர சகோதரிகளுக்கு எனது வாழ்த்தைத் தெரிவியுங்கள். பிலிப்பீன்ஸ் திருஅவை அதன் நற்செய்தி அறிவிப்பின் 500ம் ஆண்டை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில், கடந்த தலைமுறைகளின் ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவிகளை நினைப்போம். அவர்களைப் போல நாம் பாலங்களைக் கட்டவும், கிறிஸ்துவின் மந்தையை மேய்க்கவும், இந்தப் புதிய யுகத்தில் ஆசியாவில் நற்செய்தியை அறிவிக்க புதிய பாதைகளைத் தயாரிக்கவும் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் அன்பு நம்மை  உந்தித் தள்ளுகிறது என்று புனித பவுல் (2கொரி. 5,14) சொல்கிறார். நாம் கிறிஸ்துவின் தூதர்களாகச் செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம். நமது பணி ஒப்புரவின் பணி. நாம் கடவுளின் வரையில்லாத அன்பு, கருணை மற்றும் பரிவை அறிவிக்கிறோம். கிறிஸ்துவின் தூதர்கள் என்பது நாம் ஆண்டவர் இயேசுவோடு புதுப்பிக்கப்பட்ட ஆள்-ஆள் உறவு கொள்வதாகும். மனமாற்றத்திற்கும், மனசாட்சியைப் பரிசோதனை செய்வதற்கும் தனியாளாகவும், குழுவாகவும் நற்செய்தி நம்மை அழைக்கிறது. கிறிஸ்துவின் தூதர்கள் என்பது, நாம் நம் இதயங்களில் கிறிஸ்துவின் ஒப்புரவாக்கும் அருளை வரவேற்பதாகும். உலகப்போக்கைப் புறக்கணித்து அனைத்தையும் கிறிஸ்துவின் ஒளியில் புதிதாகப் பார்ப்பதாகும். நாம் செபத்தில் தினமும் இயேசுவைச் சந்திக்க வேண்டும். துறவிகள் நற்செய்தியை வாழ்வதென்பது குழுவாழ்விலும், அப்போஸ்தலிக்க வாழ்விலும் என்றும் புதுமையைக் காண்பதாகும். இளம் குருக்களுக்கும், இளம் துறவிகளுக்கும், குருத்துவ மாணவர்களுக்கும் சிறப்பாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கிறிஸ்து மற்றும் திருஅவைமீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பு, ஆர்வம் மற்றும் மகிழ்வை எல்லாரோடு, சிறப்பாக, உங்களையொத்த வயதினரோடு பகிர்ந்துகொள்ளுங்கள். ஏழ்மை மற்றும் ஊழல் சுமைகளால் சமுதாயத்தில் வாழ்வோருடன் இருங்கள். குழப்ப நிலையில் உள்ளம் உடைந்து, சோதனைகளால் நிறைந்து, பள்ளிப்படிப்பைக் கைவிட்டு தெருவில் வாழ்வோருடன் உடனிருங்கள். கைவிடப்படோர் அருகில் இருங்கள். பாலியல், திருமணம், குடும்பம் ஆகியவை பற்றிக் கூறப்படும் செய்திகளால் குழம்பியுள்ள ஒரு சமுதாயத்துக்கு கிறிஸ்தவ செய்தியின் அழகையும் உண்மையையும் அறிவியுங்கள். ஏனெனில் உங்கள் கலாச்சாரத்தில் சிறப்பாக அமைந்துள்ள பாலியல், திருமணம், குடும்பம் ஆகியவை, வல்ல சக்திகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. இச்சக்திகள் கடவுளது திட்டத்தையே சிதைக்கின்றன. பிலிப்பினோஸ் இறையன்பு மிக்கவர்கள். அன்னை மரியா மீது பக்தி நிறைந்தவர்கள். இந்தப் பெரிய மரபு, மிகுந்த மறைப்பணி வல்லமையைக் கொண்டுள்ளது. நீங்கள் பிறருக்குத் தன்னலமற்ற சேவையாற்ற வரங்களை அருளுமாறு திருஅவையின் தாயாகிய மரியாவிடம் உங்களுக்காகச் செபிக்கிறேன்.

இவ்வாறு இம்மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.