2015-01-15 15:04:00

பிலிப்பீன்ஸில் திருத்தந்தை பிரான்சிஸ்


சன.15,2015. இவ்வியாழன் காலையில் இலங்கையிலிருந்து ஏர் லங்கா விமானத்தில் பிலிப்பீன்ஸ் தலைநகர் மனிலா புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழியில் கடந்து சென்ற இந்தியா(அந்தமானை), மியான்மார், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்களுக்குத் தனது வாழ்த்தையும் செபத்தையும் ஆசீரையும் அளிக்கும் தந்திச் செய்திகளையும் அனுப்பினார். மேலும், இலங்கை அரசுத்தலைவர் மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்களுக்கும் தந்திச் செய்தியை அனுப்பினார்  திருத்தந்தை. அச்செய்தியில், அந்நாட்டில் தனக்கு கிடைத்த இனிய வரவேற்புக்கும், மக்களின் அன்புக்கும் நன்றி சொல்லி, அந்நாடு முழுவதும் அமைதி, ஒற்றுமை, வளமை ஆகியவை இடம்பெறுவதற்குத் தான் செபிப்பதாகவும் உறுதி கூறியுள்ளார் திருத்தந்தை. இலங்கையை இறைவன் ஆசீர்வதித்துப் பாதுகாப்பாராக என்ற டுவிட்டர் செய்தியையும் இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கொழும்பு நகரிலிருந்து 4,567 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, பிலிப்பீன்ஸ் தலைநகர் மனிலாவை இவ்வியாழன் பிலிப்பீன்ஸ் நேரம் மாலை 5.45 மணிக்கு, அதாவது இந்திய நேரம் மாலை 3.15 மணிக்குச் சென்றடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 6 மணி 15 நிமிடங்கள் கொண்ட இந்த விமானப் பயணத்தில் காலை உணவையும் மதிய உணவையும் முடித்துக்கொண்டார் திருத்தந்தை. மனிலா Villamor விமான நிலையத்தில் சென்றிறங்கிய திருத்தந்தையை, பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் Benigno Aquino, அரசு பிரமுகர்கள், மனிலா கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே உட்பட பலர் வரவேற்றனர். இரண்டாயிரம் பள்ளிச் சிறார் வெண்மை நிறத்தில் ஆடையும், இடுப்பில் மஞ்சள் நிற ரிபனும் கட்டி அழகாக நடனம் ஆடி வரவேற்றனர். வத்திக்கான் நாட்டுக் கொடி வெண்மை மற்றும் மஞ்சள் நிறத்தாலானது என்பது குறிப்பிடத்தக்கது. குடிசைகளைச் சார்ந்த பத்து வயது Mark Angelo Balberos, ஒன்பது வயது Lanie Ortillo ஆகிய இருவரும் திருத்தந்தைக்கு மலர்கள் கொடுத்தனர். திருத்தந்தை அச்சிறாரை அணைத்து முத்தமிட்டார்.

விமான நிலையத்திலிருந்து நேராக திறந்த காரில் மனிலா திருப்பீடத் தூதரகம் சென்றார் திருத்தந்தை. இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு திருத்தந்தையைப் பார்க்கும் இந்நாட்டு மக்கள் வழியெங்கும் இரு நாடுகளின் கொடிகளை ஆட்டிக்கொண்டு நின்று திருத்தந்தையை வரவேற்றனர். இப்படி நின்றவர்கள் இரண்டு இலட்சத்துக்கு அதிகம் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் சொல்லியுள்ளார். திருத்தந்தையும் காரில் நின்று கொண்டே கையசைத்து மக்களை மகிழ்ச்சிப்படுத்திக்கொண்டு சென்றார். மனிலா திருப்பீடத் தூதரகத்தில் இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் இவ்வியாழன் தின நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன. இவ்வெள்ளி முதல் ஞாயிறுவரை பிலிப்பீன்சில் திருத்தந்தையின் திருத்தூதுப்பயண நிகழ்வுகள் நடைபெறும்.

மனிலாவில் இந்நாள்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக மனிலாவுக்கு மூன்று நாள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஐம்பதாயிரம் படைவீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிலிப்பீன்சின் ஏறக்குறைய 10 கோடி மக்களில் 8 கோடிப் பேர் கத்தோலிக்கர். எனவே இந்நாட்டில் திருத்தந்தையின் திருத்தூதுப்பயணத்திற்கென தயாரிப்புகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை மனிலாவிலிருந்து பகிர்ந்து கொள்கிறார் மரியின் ஊழியர் சபை அருள்சகோதரி கென்சி. இவர் பிலிப்பீன்சில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்….

இந்நாள்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பீன்சில் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும், அவர் அங்கு தங்கும் ஒவ்வொரு நிமிடமும், அவர் பயணம் செய்யும் ஒவ்வொரு வாகனமும் அந்நாட்டவருக்கு விலைமதிப்பற்றவை, அவர் கடந்து செல்வதைப் பார்ப்பதே ஒரு வரம், ஓர் அருள் என்று பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை தலைவர் பேராயர் சாக்ரடீஸ் வில்லெகாஸ் அவர்கள் கூறியிருக்கிறார். இந்நாட்டு மக்களின் இந்த ஏக்கம் நிறைவேறட்டும் என நாம் செபிப்போம். கடந்த ஆண்டில் ஹையான் புயலில் பாதிக்கப்பட்டவர்களுடன் மதிய உணவு அருந்துதல் உட்பட பல நிகழ்வுகளை நடத்தி, இந்த பிலிப்பீன்ஸ் திருத்தூதுப் பயணத்தை வருகிற ஞாயிறன்று நிறைவுசெய்து வருகிற திங்கள் மாலை 5.40 மணியளவில் உரோம் வந்துசேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.