2015-01-15 16:08:00

திருத்தந்தை - இயற்கையின் முகத்தில் மனிதர் அறைகின்றனர்


சன.15,2015. கருத்துச் சுதந்திரத்துக்கு, அதிலும் குறிப்பாக ஒருவரின் விசுவாசத்தை அவமதிக்கும்போது அல்லது கேலி செய்யும்போது அதற்கு ஓர் எல்லை உண்டு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று கூறினார்.

இவ்வியாழன் காலையில் இலங்கையிலிருந்து ஏர் லங்கா விமானத்தில் பிலிப்பீன்ஸ் தலைநகர் மனிலாவுக்குப் பயணம் செய்தபோது விமானத்தில் அவரோடு பயணம் செய்த பன்னாட்டுப் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

ஏறக்குறைய 45 நிமிடங்கள் இடம்பெற்ற இந்நிகழ்வில், சமய சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கு இடையேயுள்ள வேறுபாடு பற்றிய கேள்விக்குப் பதிலளித்தபோது,  பேச்சு சுதந்திரம் அடிப்படை மனித உரிமை மட்டுமல்லாமல், பொதுநலனுக்காக ஒருவரின் மனதில் இருப்பதைப் பேசுவதாகும், ஆயினும் அதில் வரையறைகளும் உள்ளன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மதங்களைப் பற்றி அல்லது பிற மதத்தவர் பற்றி மோசமாகக் கிண்டல் செய்யும்   மற்றும் பிறரின் மதங்களை வைத்து விளையாடுபவர்கள் பலர் இருக்கின்றனர், ஆனால் இவர்கள் பிரச்சனையைத் தூண்டி விடுகின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

மேலும், வெப்பநிலை மாற்றம் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, வெப்பநிலை மாற்றம் பெரும்பாலும் மனிதரால் ஏற்படுவது, வெளியிடப்படவிருக்கின்ற சுற்றுச்சூழல் குறித்த திருத்தூது மடல், வெப்பநிலை மாற்றம் குறித்த பாரிஸ் மாநாட்டில் கடவுளின் படைப்பைப் பாதுகாப்பதற்குத் துணிச்சலான தீர்மானங்கள்  எடுப்பதற்கு ஊக்குவிக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார். இயற்கையின் முகத்தில் மனிதர் அறைகின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, ஒரு வகையில் நாம் இயற்கையை மிஞ்சி நிற்கிறோம் என்றார்.

பிலிப்பீன்ஸ் திருத்தூதுப் பயணத்தில் தான் முக்கியத்துவம் கொடுக்கவிருக்கும் விவகாரங்கள் பற்றியும் பேசிய திருத்தந்தை, ஏழைகளின் நெருக்கடிகள், 2013ம் ஆண்டில் ஹையான் புயலில் பாதிக்கப்பட்டவரின் துயரங்கள், சமூக-ஆன்மீகத்தில் பல அநீதிகளை எதிர்நோக்குபவர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுக்கவிருப்பதாகக் கூறினார்.

இலங்கை மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் மூன்றாவது திருத்தந்தையாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உள்ளார். இவ்விரு நாடுகளும், இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு திருத்தந்தையை தங்கள் நாடுகளில் தற்போது பார்த்துள்ளன. உலகில் பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக, கத்தோலிக்கரை அதிகமாகக் கொண்டிருக்கும் நாடு பிலிப்பீன்ஸ். ஆசியாவிலுள்ள மொத்தக் கத்தோலிக்கரில் பாதிப்பேர் பிலிப்பீன்சில் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.