2015-01-14 15:14:00

மடுத்திருத்தலத்தில் திருத்தந்தையின் உரை


சன.14,2015. இலங்கை மன்னார் மாவட்ட மடுத்திருத்தலத்திற்கு இப்புதன் பிற்பகலில் சென்ற திருத்தந்தை, அங்கு அன்னை கன்னி மரியா திருவழிபாட்டில் கலந்துகொண்டு உரையாற்றி நாட்டில் அமைதிக்காகச் செபித்தார். திருத்தந்தை ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்...

அன்புமிக்க சகோதர, சகோதரிகளே, நாம் நம் அன்னையின் இல்லத்தில் இருக்கின்றோம், மருதமடு அன்னையின் இத்திருத்தலத்தில் ஒவ்வொரு திருப்பயணியும் தன் சொந்த வீட்டில் இருப்பதைப் போல உணர முடியும். ஏனெனில், இங்குதான் மரியாள், தமது திருமகன் இயேசுவின் பிரசன்னத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்றார். தமிழர்களும், சிங்களவர்களும் இலங்கையராக, ஒரே குடும்பத்தின் உறுப்பினராக, இங்கு வருகை தருகின்றனர். தமது இன்ப, துன்பங்களையும், எதிர்பார்ப்புக்களையும், தேவைகளையும் அவரிடம் சமர்ப்பிக்கின்றனர்.

இலங்கை நாட்டின் இதயத்தையே பிளந்த நீண்ட காலப் போரினால் துன்பப்பட்ட குடும்பங்கள் இன்று இங்கே பிரசன்னமாக இருக்கின்றன. பயங்கர வன்முறை மற்றும் இரத்தக்களரிகளின் ஆண்டுகளில், வடக்கிலும் தெற்கிலுமாக எத்தனையோ மக்கள்      உயிரிழந்துள்ளனர். இத்திருத்தலத்தோடு சம்பந்தப்பட்ட துயர நிகழ்வுகளை எந்தவோர் இலங்கையரும் மறக்கவே முடியாது. இலங்கையில் ஆரம்பக் கிறிஸ்தவர்களின் வருகையோடு தொடர்புடைய, வணக்கத்துக்குரிய மரியாவின் திருஉருவம் அவரின்   திருத்தலத்திலிருந்து (பாதுகாப்பு கருதி) எடுத்துச் செல்லப்பட்ட அந்தச் சோகமான நாளையும் மறக்கவே முடியாது.

ஆனாலும்கூட நம் அன்னை உங்களோடு எப்போதும் உடனிருந்தார். ஒவ்வோர் இல்லத்திற்கும், காயம்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் அமைதியான வாழ்வுக்குத் திரும்ப விரும்பும் அனைவருக்கும் அவர் அன்னையாக இருக்கிறார். இலங்கை வாழ் மக்களை, கடந்த கால மற்றும் நிகழ் காலத்தின் அனைத்து ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றி வருவதற்காக இன்று நன்றி கூறுகிறோம்.

 

நம் அன்னையின் பிரசன்னத்திற்காக இன்று நாம் அவருக்கு நன்றி கூற விழைகின்றோம். காயங்களைக் குணமாக்கி, உடைந்த உள்ளங்களில் அமைதியை மீண்டும் தரக்கூடிய ஆற்றல் கொண்டவர் இயேசு மட்டுமே. அவரை நமக்குத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் அன்னைக்கு நன்றி கூறுகின்றோம். மேலும், இறை இரக்கத்தின் அருளை நம்மேல் பொழிந்திட வேண்டுகிறோம். அத்துடன் நமது பாவங்கள், மற்றும் இந்நாடு எதிர்கொண்ட அனைத்துத் தீமைகளுக்கும் பரிகாரம் செய்ய, தேவையான அருளை வேண்டுகிறோம்.

இதனைச் செய்வது, இலகுவானதல்ல. ஆனாலும் கூட, ஒருவரையொருவர் உண்மையான மனஸ்தாபத்துடன் அணுகவும், உண்மையான மன்னிப்பைக் கொடுக்கவும் அதனை நாடவும், இவ்வாறாக, நாம் இறை அருளைப் பெற்றுக்கொள்ள முடியும். மன்னிக்கவும், மற்றும் சமாதானத்தை அடைவதற்குமான கடினமான இந்த முயற்சியிலே, அன்னை மரியா இங்கிருந்து நம்மை ஊக்கமூட்டுகிறார், வழி நடத்துகிறார், அழைத்துச் செல்கிறார்.

தமிழ், சிங்கள மொழி பேசும் சமூகங்களை உள்ளடக்கிய இலங்கை மக்கள், இழந்துவிட்ட ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புகின்ற முயற்சியில் அன்னை மரியாள் தன் பரிந்துரைகள் வழியாக, துணை நிற்க வேண்டுவோம். போரின் முடிவில் அன்னையின் திருச் சுரூபம் மடுத் திருத்தலத்திற்கு மீண்டும் வந்ததுபோல், அன்னையவரின் அனைத்து இலங்கை மக்களும் ஒப்புரவு மற்றும் தோழமையைப் புதுப்பிக்கும் உணர்வுடன் இறைவனிடம் திரும்பி வந்துசேர மன்றாடுவோம்.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, நாம் ஒருவர், ஒருவருக்காக மன்றாடுவோம். இந்தத் திருத்தலமானது, செபத்தின் இல்லமாக, அமைதியின் இருப்பிடமாகத் திகழ வேண்டுவோம். மருதமடு அன்னையின் பரிந்துரையால், ஒப்புரவு, நீதி, சமாதானம் நிறைந்த எதிர்காலம் இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் உரித்தாவதாக. ஆமென்.

இவ்வாறு மடுமாதா திருத்தலத்தில் தனது மரையுறையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.