2015-01-14 16:46:00

மடு அன்னைமரியா திருத்தல வரலாறு


சன.14,2015. இலங்கையின் வடக்கே தமிழர் பகுதியான மன்னார் மறைமாவட்டத்தில் மடு என்ற இடத்தில் அமைந்துள்ள மடு அன்னைமரியா திருத்தல வரலாறு 400 வருட பழமை கொண்டது. அக்காலத்தில் இலங்கை மக்கள் போர்த்துக்கீசியர்களால் கிறிஸ்தவர்களாக மனமாறினர். போர்த்துக்கீசியர்களின் செல்வாக்கு பரவிவிடும் என்று பயந்த யாழ்ப்பாண மன்னர் சங்கிலி, 1544ம் ஆண்டில் 600 மன்னார் கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்தார். இப்படுகொலைக்குப் பயந்த சில விசுவாசிகள் தற்போதைய மடுத் திருத்தலப் பகுதியில் ஒரு சிறிய அன்னைமரியா உருவத்தை வைத்து வணங்கினர். மேலும், 1583ம் ஆண்டில் மேலும் சில கிறிஸ்தவர்கள் மன்னாரிலிருந்து தப்பி வந்து ஒரு சிறிய ஆலயத்தை இவ்விடத்துக்கு அருகில் கட்டினர். மண்தாய் (Mantai) என்று அழைக்கப்பட்ட இதுவே மடு அன்னைமரியாவின் முதல் வீடாக இருந்தது. 1656ம் ஆண்டில் டச்சுக்காரர் சிலோனில் காலனி ஆதிக்கத்தைத் தொடங்கியபோது வன்முறையினால் கத்தோலிக்கரை துன்புறுத்தினர். அப்போது புகலிடம் தேடிய 30 கத்தோலிக்க குடும்பங்கள் தங்களுடன் மடு அன்னைமரியா திருவுருவத்தை எடுத்துச் சென்று 1670ம் ஆண்டில் மருதமடு என்ற இடத்தில் அதனை வைத்தனர். அந்த இடத்தில்தான் தற்போதைய மடு அன்னைமரியா திருத்தலம் உள்ளது. இது, இலங்கை தமிழ் மற்றும் சிங்கள கத்தோலிக்கரின் புனித வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது. மரத்தாலான இத்திருவுருவம் ஒன்றையடி உயரமுடையது. ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெறும் இவ்வாலயத்தின் ஆண்டு திருவிழாவில் ஏறக்குறைய 10 இலட்சம் மக்கள் இன, மத பேதமின்றி கலந்து கொள்கின்றனர். ஈழப்போர் தொடங்கியதில் இருந்து இவ்வாலயத்திற்கு செல்வோரின் தொகை பல மடங்கு குறைந்தது. இனப்போரின் தாக்கத்தினால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இவ்வாலயச் சுற்றுவட்டத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர். ஏப்ரல் 2008ல் ஆலயத்தை நோக்கி இலங்கை இராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்திய பலத்த எறிகணை வீச்சினால் ஆலயம் பலத்த சேதத்துக்குள்ளாகியது. இதனால் அங்கு அடைக்கலமடைந்திருந்த மக்கள் அனைவரும் வேறு பாதுகாப்பான இடத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர். அந்த ஆலயத்தில் இறுதியாகத் தங்கியிருந்த குருக்கள் மற்றும் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறினர். இதனை அடுத்து அத்திருத்தலத்தில் 400 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த அன்னையின் திருவுருவத்தின் பாதுகாப்புக் கருதி அவ்வுருவம் 2008ம் ஆண்டு ஏப்ரல் 4ல் மன்னார் தேவன்பிட்டி புனித சவேரியர் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நவம்பர் 20, 1999ல் மடு திருத்தலத்தை நோக்கி எறியப்பட்ட எறிகணை வீச்சினால் அங்கு தங்கியிருந்த 44 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 60 பேர் வரையில் படுகாயமடைந்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.