2015-01-14 11:38:00

புனிதர் ஜோசப் வாஸ்


சன.14,2015. சனவரி 14, இப்புதன் காலையில் கொழும்பு காலிமுகத் திடலில், இந்தியர் உட்பட ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட பல்சமய மக்களின் முன்னிலையில் முத்திப்பெறுபெற்ற ஜோசப் வாஸ் அவர்களைப் புனிதராக அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அச்சமயத்தில் கோவாவில் ஆலய மணிகள் ஒலித்தன. இலங்கைத் திருஅவையின் முதல் புனிதராக அறிவிக்கப்பட்டுள்ள புனிதர் ஜோசப் வாஸ் அவர்கள், இலங்கைத் திருஅவையின் திருத்தூதர், இலங்கைத் திருஅவையின் தூண் என்றெல்லாம் போற்றப்படுகிறார். புனிதர் ஜோசப் வாஸ் அவர்கள், 1651ம் ஆண்டு  ஏப்ரல் 21ம் தேதி இந்தியாவின் போர்த்துக்கீசியக் கோவாவின் பெனவ்லிம் ஊரில் பிறந்து, கோவா உயர்மறைமாவட்டத்துக்காக குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இதற்குப் பின்னர் காலணி அணியாமல் வெறுங்காலுடன் ஏழைகள் போல் நடந்து சென்று நற்செய்தி அறிவித்தார். அதனால் இவரது புகழ் பரவியது. குருவான உடனேயே இவர் சிலோன் நாட்டுக்கு, அதாவது தற்போதைய இலங்கைக்கு மறைபோதகராகச் செல்ல விரும்பி ஆயரிடம் விண்ணப்பித்தார். ஆனால், இவர், கோவாவில் இருந்த Padroado அதிகாரிகளால் 1681ம் ஆண்டில் Canaraவின் குருகுல அதிபராக நியமிக்கப்பட்டார். அச்சமயம் Padroado அதிகாரிகளுக்கும் திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத்துக்கும் இடையே ஆயர் நியமன விவகாரத்தில் பிரச்சனை நடைபெற்றது. இதனால் கத்தோலிக்கரிடையேயும் பிளவு ஏற்பட்டது. இப்பிரச்சனைக்கு முடிவு காண்பதற்கு இப்புனிதர் உழைத்தார். இவரது அயராத மறைபோதகப் பணியைப் பார்த்தவர்கள்,  பொறாமை கண்டு இவரைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டினார்கள். அதனால் ஒருநாள் சில இந்துக்கள் இரவில் இவரை அணுகி, இறந்துகொண்டிருக்கும் ஒரு மனிதருக்கு இறுதி அருளடையாளம் கொடுக்குமாறு அழைத்தனர். புனிதரும் அவர்களுடன் சென்றார். இவர்கள் ஒரு குன்றை அடைந்தபோது அந்த மனிதர்கள் இவரைக் கொலை செய்ய முயற்சித்தனர். புனித ஜோசப் வாஸ் பாறையின்மேல் முழந்தாள்படியிட்டார். தனது கோலை பாறையில் ஊன்றி நேராகப் பிடித்தார். ஓர் ஒளி அங்கு தோன்றியது. அவர் முழந்தாள்படியிட்ட இடத்திலிருந்து தண்ணீர் பீறிட்டுக் கிளம்பியதை அந்த மனிதர்கள் பார்த்தார்கள். இந்தப் புதுமையைப் பார்த்த அந்த இந்து மனிதர்கள் புனிதரை பாதுகாப்பாக அவரது பங்கு இல்லத்துக்கு திரும்ப அழைத்து வந்தனர். கோவா உயர்மறைமாவட்டத்தில் ஒரு துறவறக் குழுவாக வாழ விரும்பிய குருக்கள் குழுவில் இவரும் 1685ம் ஆண்டில் சேர்ந்தார். அதுவே பின்னாளில் புனித பிலிப் நேரி மறையுரையாளர்கள் சபையாக மாறியது. அக்காலத்தில் சிலோன் என்ற இலங்கையில் காலனி ஆட்சியில் இருந்த டச்சுக்காரர் கால்வினிசத்தைப் பின்பற்றியவர்கள். இவர்கள் கத்தோலிக்கர் அடக்கி ஒடுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர், கத்தோலிக்கரையும், குருக்களையும் கொலை செய்தனர். கத்தோலிக்கப் பள்ளிகளைத் தரைமட்டமாக்கினர். இவற்றைக் கேள்விப்பட்ட புனிதர் ஜோசப் வாஸ் அவர்கள், 1687ம் ஆண்டு ஏப்ரலில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். தர்மம் எடுப்பவராக இலங்கை வந்த இப்புனிதருக்கு சில்லாலையூர் மக்கள் புகலிடம் அளித்தனர். அவர் அங்கேயே தங்கி சில்லாலையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தோலிக்க மக்களுக்கு மறைப்பணியாற்றினார். பின்னர் அவர் மாறுவேடத்தில் கால்நடையாக, 24 ஆண்டுகளாகப் வன்னி, புத்தளம், மன்னார், பூநகரி ஆகிய இடங்களுக்குச் சென்று கிறிஸ்தவத்தை அறிவித்தார். புனித ஜோசப் வாஸ், இலங்கை நாட்டில் தமிழ் மக்கள் நடுவிலும் சிங்கள மக்கள் நடுவிலும் பணியாற்றினார். இவர் திருவிவிலியத்தை தமிழிலும் சிங்களத்திலும் மொழி பெயர்த்தார். அந்த இருமொழிகளிலும் மக்கள் கடவுளை வழிபடுவதற்கான நூல்களையும் இயற்றினார்.

 மடு நகரில் அமைந்துள்ள அன்னை மரியா ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்டுவதற்கு இவர் உதவினார். மேலும், கிறிஸ்தவ நம்பிக்கையை இலங்கையில் பரப்பும்போது, அந்தந்த மக்களின் பண்பாட்டுப் பாணிகளை மதிக்க வேண்டும் என்பதிலும் அவர் கருத்தாயிருந்தார். மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து, கடவுள் நம்பிக்கையில் மக்கள் வளர வேண்டும் என்பது அவருடைய குறிக்கோளாக இருந்தது.

1692ல் கண்டிக்குச் சென்ற புனிதர் வாஸ், அங்கு ரோமன்-கத்தோலிக்க மதத்தை மீண்டும் ஏற்படுத்த மிகவும் முயற்சி செய்தார். இதனால் அவர் அங்கு இரண்டாண்டுகள் சிறையிலும் இருக்க நேரிட்டது. கண்டியிலிருந்தே தனது சேவையைத் தொடர்ந்த இப்புனிதர், 1696ல் இலங்கையின் குருகுல அதிபரானார். 1710ம் ஆண்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித வியாகுலமாதா ஆலய வளாகத்தில் சிறு ஓலைக் கோயில் கட்டித் திருப்பலி ஒப்புக் கொடுக்கும்போது காட்டிக் கொடுக்கப்பட்டு மரத்தில் கட்டி அடிக்கப்பட்டார். 1711ம் ஆண்டில் கண்டியில் காலமானார்.

இன்று "இலங்கையின் திருத்தூதர்" என அழைக்கப்படும் ஜோசப் வாஸ் அடிகளார், 1995, சனவரி 16ல் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் கொழும்பு வந்திருந்த போது காலிமுகத்திடலில் இடம்பெற்ற திருப்பலியில் அருளாளராக அறிவிக்கப்பட்டார். அதே இடத்தில் 2015ம் ஆண்டு சனவரி 14ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் இவர் புனிதராக உயர்த்தப்ப்ட்டார்.

 ஆதாரம் :   வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.