2015-01-14 09:51:00

அருளாளர் ஜோசப் வாஸ் புனிதர்பட்டத் திருப்பலி மறையுரை


சன.14,2015. அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, இன்று நாம் ஜோசப் வாஸ் அவர்களின் புனிதர்பட்ட நிகழ்வை, பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றோம். உலகின் எல்லைவரை வெளிப்படும் தமது அன்பையும், இரக்கத்தையும் பற்றிய இறைவிருப்பத்தை, இந்தத் திருப்பலி வாசகங்கள் எடுத்துரைக்கின்றன. தாம் அனுப்பிய திருமகனும், நம் ஆண்டவருமான இயேசு கிறிஸ்து, நற்செய்தியை அனைத்துலகிற்கும் அறிவிக்க தேர்ந்தெடுத்தத் திருத்தூதர்கள் வழியாக, ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஏற்ற மறைபரப்புப் பணியாளர்கள் வழியாக, இறைவன் தன் அன்பை வெளிப்படுத்தினார்.

இலங்கை மக்கள்பால் இறைவன் கொண்டுள்ள அன்பின் வல்லமைமிக்க அடையாளத்தை புனித ஜோசப் வாஸ் அவர்களில் நாம் காண்கிறோம். அத்துடன், நற்செய்திக்குப் பிரமாணிக்கமாக இருக்கவும், புனிதத்துவத்தில் வளர்ந்திடவும், மன்னிப்பு, இரக்கம், நட்புறவு எனும் கிறிஸ்துவின் செய்திக்கு சாட்சிகளாய் திகழவும் கிடைத்த ஓர் அழைப்பாகவும் காண்கிறோம்.

பல்வேறு காரணங்களுக்காக புனித ஜோசப் வாஸ் அவர்கள், நமக்கு ஒரு முன் உதாரணமாகத் திகழ்கின்றார். ஆனாலும், அவற்றில் மூன்று காரணங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவதாக, அவர் ஓர் எடுத்துக்காட்டான குருவாகத் திகழ்ந்தார். இன்று, இங்கு, எத்தனையோ குருக்கள், துறவற நிலையினர் பிரசன்னமாக இருக்கின்றனர். இறைவனுக்கும், அயலவருக்குமான பணிக்கு அர்ப்பணிப்பு என்பதன் பொருளை புனித ஜோசப் வாஸ் அவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார். இந்த அர்ப்பணிப்பின் அர்த்தம் என்னவெனில், நாம் செபிக்கும் மக்களாக, மற்றவர்களை நாடிச் சென்று, இயேசு கிறிஸ்துவை எல்லா இடங்களிலும் அறிவிக்கவும், அன்பு செய்யவும் நம் வாழ்வை அர்ப்பணிப்பதாகும். நற்செய்திக்காகத் துன்புறுவதன் மதிப்பு, திருஅவையின் மறைப்பணிக்காகத் தமது சேவையில் அவர் காட்டியக் கீழ்ப்படிதல், மற்றும் இறைமக்கள்பால் அவர் காட்டிய அன்பு  நிறைந்த பரிவு ஆகியவற்றை, புனிதரின் வாழ்வு நமக்குக் கற்றுத்தருகின்றது.

இரண்டாவதாக, நம் அயலார் எந்தவொரு இனமாக இருந்தாலும் சரி, மதமாக இருந்தாலும் சரி, அல்லது சமூக நிலைப்பாடாக இருந்தாலும் சரி, அவர்கள் மேல் நாம் கொண்டிருக்கவேண்டிய அன்பு கலந்த அக்கறையை புனித ஜோசப் வாஸ் அவர்கள் வெளிப்படுத்துகிறார். இன்றும் கூட, புனிதரின் எடுத்துக்காட்டானது இலங்கைத் திருஅவையின் கல்வி, சுகாதார நிறுவனங்கள் மற்றும் இரக்கச் செயல்பாடுகள் வழியே தொடர்கின்றது. அனைத்து மக்களும் உண்மையை அறிந்திடவும், வெளிப்படையாக தமது மத நம்பிக்கைகளை வெளிப்படுத்தவும் சுதந்திரம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். உண்மையான இறைவழிபாடு, இனப் பாகுபாடு, வெறுப்பு, வன்முறை ஆகியவற்றை விளைவிக்காது, மாறாக, மனித உயிரின் புனிதத் தன்மை, மற்றவரின் மாண்பு, சுதந்திரம் மட்டில் மரியாதை, பொது நலனிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை விளைவிக்கும் என்பதை புனித ஜோசப் வாஸ் அவர்களின் வாழ்வு நமக்குச் சொல்லித்தருகிறது.

இறுதியாக, புனித ஜோசப் வாஸ் அவர்கள், அப்போஸ்தலிக்க ஆர்வத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார். பல்வேறு மதச் சூழலில், அர்ப்பணிப்பு, தளரா முயற்சி மற்றும் தாழ்ச்சியுடன், நற்செய்தியின் உண்மையையும், அழகையும் எவ்வாறு எடுத்துரைப்பது என்பதை அவர் அறிந்திருந்தார். இத்தகைய அணுகுமுறை, இயேசுவின் இந்நாள் சீடர்களுக்கும் பொருந்தும்.

அன்புமிக்க சகோதர, சகோதரிகளே, புனித ஜோசப் வாஸ் அவரக்ளைப் பின்பற்றி, இந்நாட்டின் கிறிஸ்தவ மக்கள் விசுவாசத்தில் உறுதிப்படுத்தப்படவும், இலங்கை சமூகத்திலே சமாதானம், நீதி மற்றும் ஒப்புரவுக்காக தங்கள் மேலான பங்களிப்பை வழங்கிடவும் நான் இறைவனை வேண்டுகிறேன். உங்கள் அனைவரையும் எமது புதியப் புனிதரின் வேண்டுதல்களுக்குக் கையளிக்கும் அதேவேளையில், எனக்காக மன்றாடும்படி உங்களை வேண்டி நிற்கின்றேன்.

இவ்வாறு தனது மரையுறையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.