2015-01-13 16:30:00

அரசுத்தலைவர் மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்களின் வரவேற்புரை


சன.13,2015. திருத்தந்தையே, தங்களின் ஆசியத் திருத்தூதுப் பயணத்தில் இலங்கைக்கு வந்திருப்பது எங்களுக்கு பெரு மகிழ்வைத் தருகின்றது. இதை ஒரு மதிப்பாகவும்   கருதுகின்றோம். இலங்கையின் புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில நாள்களில் திருத்தந்தையே தங்களின் இப்பயணம் நடைபெறுவது, அரசுத்தலைவர் பணிக்கு தங்களின் ஆசீரை இறைஞ்சுவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மண் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களை வரவேற்றது. அப்போது நாடு முழுவதும் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தது. அச்சமயத்தில் அன்றாட வாழ்வின் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத நிலையில் மக்கள் துன்புற்றனர். ஆனால் திருத்தந்தையே தாங்கள் எங்கள் நாட்டுக்கு வந்துள்ள இச்சமயத்தில், நாடெங்கும் ஒப்புரவுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு அமைதியும் வளமையும் உள்ளன. மக்கள் மாண்புடன் வாழ்கின்றனர். அரசு எடுத்துள்ள ஏழ்மையை ஒழிப்பதற்கான முயற்சிகள் சந்தேகத்துக்கு இடமின்றி உதவியுள்ளன. உலகில் பணக்காரர்-ஏழைகள் இவர்களுக்கு இடையேயுள்ள பொருளாதார வேறுபாட்டைக் குறைப்பதற்கு திருத்தந்தையே தாங்கள் கொடுத்துவரும் முன்னுரிமை பாராட்டுக்குரியது. மக்கள் மத்தியில் பிளவுபடாத அமைதியை ஏற்படுத்துவதற்கு, உரையாடலையும் ஒப்புரவையும் ஊக்குவிப்பதில் முன்னேற்றம் கண்டுவரும் இக்காலத்தில் இத்திருத்தூதுப் பயணம் இடம்பெறுகின்றது. இப்பயணத்தில் முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ் அவர்களை புனிதராக அறிவிப்பது, இந்நாட்டின் கத்தோலிக்கர் மத்தியில் நம்பிக்கை வளரும். மேலும், அப்புனிதர் திருஅவையைக் கட்டியெழுப்புவதற்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூருவதாகவும் இருக்கும். திருத்தந்தையே, உலகில் முக்கிய மதங்களான கிறிஸ்தவம் மற்றும் புத்த மதத்தைக் காப்பதற்காக இரு நாடுகள் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. 'பகைவரிடம் அன்புகூருங்கள், துன்புறுத்துபவர்களுக்காகச் செபியுங்கள்' (மத்.5:44) என்று இறைமகன் கிறிஸ்து எடுத்துரைத்தார். புத்தரும், கோபம் கோபத்தினால் தணியாது, இருப்பினும் கோபத்தை அன்பினால் தணிய வைக்க முடியும். தீமையை நன்மையின் மூலமே கட்டுப்படுத்த முடியும் (தம்மபதம்) என்று  போதனையில் கூறியுள்ளார். இத்தகைய நல்ல போதனைகளை இலங்கை மக்கள் கடைப்பிடிக்கின்றனர். இவை பல்சமய உரையாடலுக்கும், சமூக ஒற்றுமை மற்றும் ஒன்றிப்புக்கும் சிறப்புப் பங்களிப்பை நல்குகின்றன. பல்சமய உரையாடல் மூலம் சமூக நல்லிணக்கத்தைக் கொண்டுவர முடியும் என தாங்கள் உலக அமைதி தினச் செய்தியில் கூறியுள்ளீர்கள். இந்த திருத்தூதுப் பயணம், பலன்தரக்கூடியதும், நினைவில் நிலைத்து நிற்கக்கூடியதுமான ஒரு பயணமாக அமைந்திட செபிக்கின்றேன். இலங்கைக்கும் திருப்பீடத்துக்கும் இடையே உறவுகளை உறுதிப்படுத்துவதற்கு நம் உரையாடல் நாளை எதிர்நோக்கியிருக்கிறேன். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் இலங்கை மக்களுக்குத் தங்களின் ஆசீரை இறைஞ்சுகிறேன். நன்றிகள் பல.

 ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.