2015-01-12 17:18:00

தீவிரவாதத்துக்கு எதிரான பேரணிக்கு பான் கீ மூன் வரவேற்பு


சன.12,2015. இஞ்ஞாயிறன்று பாரிசில் 56 உலகத் தலைவர்கள் உட்பட ஏறக்குறைய 36 இலட்சம் பேர் கலந்துகொண்ட பயங்கரவாதத்துக்கு எதிரான பேரணிக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த புதனன்று பாரிசில் சார்லி ஹெப்டோ வார இதழ் அலுவலகத்தில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலைக் கண்டித்து நடத்தப்பட்ட பேரணியை தான் வரவேற்பதாகவும், உலகில் தீவிரவாதம் எங்கு தலைதூக்கினாலும் அதற்கெதிரான எதிர்ப்பை பதிவுசெய்தாக வேண்டும் என்றும் கூறியுள்ளார் பான் கீ மூன்.

இஞ்ஞாயிறன்று நடைபெற்ற மாபெரும் பேரணி, பிரான்சின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய பேரணி என்று ப்ரெஞ்ச் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாரிசில் பத்திரிகை அலுவலகத்திலும், கொஷார் சூப்பர்மார்க்கெட்டிலும் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அங்கு கொல்லப்பட்ட ஒரு காவல்துறையினரின் குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்து பாரிசில் ஞாயிறன்று மாபெரும் பேரணி நடைபெற்றது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், பிரான்ஸ் அதிபர் ஹோலாந்த் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.  

இப்பேரணியில் பான் கீ மூன் அவர்கள் சார்பாக தனது சிறப்புத் தூதர் ஸ்டாஃபான் டி மிஸ்தூராவை அனுப்பி, செய்தி ஒன்றையும் வைத்திருந்தார் பான் கி மூன்.

 ஆதாரம் : Agencies/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.