2015-01-12 16:45:00

திருத்தந்தையின் இலங்கைத் திருத்தூதுப் பயணம், ஒரு முன்தூது


சன.12,2015. “நாளை இரவு இலங்கைக்கும் பிலிப்பீன்ஸ்க்கும் திருத்தூதுப் பயணத்தைத் நான் தொடங்குகிறேன், உங்களது செபத்தால் என்னோடு பயணம் செய்யுங்கள், உரோமையிலுள்ள இலங்கை மற்றும் பிலிப்பீன்ஸ் மக்கள் எனக்காகச் செபியுங்கள்”. இவ்வாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆசியாவுக்கான இரண்டாவது திருத்தூதுப் பயணம் இத்திங்கள் இரவு உரோம் நேரம் இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் தென் கொரியா சென்ற திருத்தந்தை, இந்த 2015ம் ஆண்டில் தனது முதல் திருத்தூதுப் பயணத்திற்கு ஆசியாவையேத் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும், இம்மாதம் நான்காம் தேதி திருத்தந்தை அறிவித்துள்ள இருபது புதிய கர்தினால்களுள் மூன்று பேர் ஆசியர்கள். மியான்மார், வியட்நாம், தாய்லாந்து ஆகிய மூன்று ஆசிய நாடுகளுக்குப் புதிய கர்தினால்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆசியத் திருஅவைகள் மீது, ஆசிய மக்கள்மீது திருத்தந்தை கொண்டிருக்கும் அக்கறையையும் அன்பையும் இவை காட்டுகின்றன எனச் சொல்லலாம். புதிய அரசுத்தலைவருடன் திருத்தந்தையை வரவேற்பதற்கு இலங்கை மக்கள் தயாராக உள்ளனர். இத்திருத்தூதுப் பயணம் குறித்த விபரங்களை நமக்கு வழங்குவதற்கு வத்திக்கான் வானொலியிலிருந்து ஒரு குழு இலங்கை சென்றுள்ளது. இக்குழுவில் ஒருவராக அங்குச் சென்றுள்ள நம் தமிழ்ப்பிரிவின் தலைவர் அருள்பணி எல் எக்ஸ் ஜெரோம் அவர்கள், இலங்கையில் இடம்பெற்றுவரும் தயாரிப்புகள் பற்றி இப்போது பேசுகிறார்.......

இலங்கை நாடு என்றாலே நமக்கு உடன்பிறப்பு உணர்வு ஏற்படும். அங்குள்ள தமிழர்களுக்கும் நமக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு இது. இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில், தெற்கு ஆசியாவில் தென்னிந்தியக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு இலங்கை. முற்காலத்தில் இத்தீவு, இலங்கை, இலங்காபுரி, லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம், சின்மோன்டு, சேலான், தப்ரபேன், செரெண்டிப், சேரன்தீவு உட்பட பல பெயர்களால் அழைக்கப்பட்டது. பின்னர் 1505ம் ஆண்டில் போர்த்துக்கீசியர்கள் காலனியைத் தொடங்கியபோது Ceilão என்றும், ஆங்கிலேயர்கள் அப்பெயரை சிலோன் என்றும் மாற்றி அழைத்தனர். இந்நாடு பிரித்தானியர்களிடமிருந்து 1948ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தது. பின்னர், 1972ம் ஆண்டில் இலங்கை ஒரு குடியரசாக அறிவிக்கப்படும் வரை சிலோன் என்றே அழைக்கப்பட்டது. இந்நாட்டின் அமைப்பு காரணமாக "இந்தியப் பெருங்கடலின் முத்து" என்ற புகழும் இதற்கு உண்டு.

இந்நாட்டுக்கு தென்கிழக்கே மாலத்தீவுகளும், வடகிழக்கே இந்தியாவும் கடல் எல்லைகளாக உள்ளன. இலங்கை பற்றி எழுதப்பட்டுள்ள குறிப்புகளின்படி இந்நாட்டின் வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது எனினும், இங்கு மனிதர்கள் குடியேறியது குறைந்தது ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகள், ஏன் ஐந்து இலட்சம் ஆண்டுகள்கூட இருக்கலாம் என சில ஏடுகள் கூறுகின்றன. இந்நாட்டில், சிங்களவர், இலங்கைத்தமிழர், இலங்கைச் சோனகர், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்ரிக்கர், பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகிய இனத்தவர் வாழ்கின்றனர். இதனால் இந்நாடு பல சமய, இன, மொழிகள் பேசுவோரின் தாயகமாகவும் உள்ளது. இந்நாட்டின் அமைப்பு மற்றும் ஆழமான துறைமுகம், பழங்கால சில்க் பாதை முதல், இரண்டாம் உலகப் போர்வரை பல முக்கிய யுக்திகள் இடம்பெறுவதற்கு வசதியாக இருந்தன.

இலங்கை வளமையான புத்தமத மரபுரிமையைக் கொண்டுள்ளது. முதல் புத்தமதப் படைப்புக்கள் உள்ள இலங்கையில் நான்காவது புத்தமத அவை கி.மு.29ம் ஆண்டில் நடந்துள்ளது. இத்தீவு நாட்டின் இக்கால வரலாறு, ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் இனச்சண்டையால் குறிக்கப்பட்டுள்ளது. இச்சண்டை 2009ம் ஆண்டில் முடிவடைந்தது. மக்களாட்சி நாடாகிய இலங்கை, ஒற்றையாட்சி அரசால் ஆளப்படும் நாடாகும். இந்நாடு, தேயிலை, காப்பி, இரத்தினம், தேங்காய், இரப்பர், cinnamon ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றது. மேலும், "புன்னகைக்கும் மக்களின் நாடு" எனவும் இது அறியப்படுவதுண்டு. வெப்பமண்டலக் காடுகளையும், அதிகமான பல்வகை உயிரினங்களையும் கொண்டுள்ள இத்தீவு நாடு, பல்வேறு வகையான இயற்கை அமைப்பினையும் கொண்டது. சார்க் நாடுகளின் அமைப்பு, ஐ.நா., காமன்வெல்த் கூட்டமைப்பு, ஜி77, அணிசேரா நாடுகள் ஆகியவற்றில் உறுப்பினராகவும் இந்நாடு உள்ளது. மனித வளர்ச்சி குறியீட்டில் ஆசியாவில் உயர்வாக இந்நாடு கணிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவு பற்றிய முதலாவது எழுத்துமூல ஆவணத்தை இந்தியக் காவியமான கம்ப இராமாயணத்தில் காணமுடிகிறது. இதில், செல்வத்தின் கடவுளான குபேரனுக்காக விசுவகர்மா என்ற தேவ சிற்பியால் உருவாக்கப்பட்ட லங்கா என்ற அரசை பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. மேலும் குபேரன் தனது சகோதரனான இராவணன் என்ற அசுரனால் வெற்றி கொள்ளப்பட்டதாகவும், இராவணனிடம் பறக்கும் புட்பக விமானம் இருந்ததாகவும் இது குறிப்பிடுகிறது. இன்றைய நகரான வாரியப்பொல எனும் இடமே இராவணனது விமான ஓடுபாதையாக இருந்திருக்கலாமென நம்பப்படுகிறது. இன்றைய இலங்கையில் வாழும் வேடர்கள் எனும் பூர்வீக இனத்தவரே அந்நாட்டில் ஆரம்பகாலத்தில் குடியேறியவர்கள் என்றும், தற்போது இவர்களின் எண்ணிக்கை 2,500 என்றும் தெரிகிறது. மேலும், இலங்கையின் தென்பகுதி நகரான காலி, பண்டைய துறைமுக நகரான தர்சீசுவாக இருக்கலாமென அயர்லாந்து நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஜேம்ஸ் எமர்சன் தெனன்ட் என்பவர் எழுதியிருக்கிறார். விவிலியத்தில் குறிப்பிடப்படும் சாலமோன் மன்னன் இங்கிருந்தே யானைத் தந்தங்களையும் மயில்களையும் ஏனைய விலைமதிப்புமிக்க பொருட்களையும் பெற்றுக்கொண்டார் எனச் சொல்லப்படுகிறது.

Pāli மொழியில் எழுதப்பட்ட மகாவம்ச நூலின்படி, Yaksha,Naga இனத்தவரே இலங்கையின் பூர்வீக இனத்தவர் ஆவர். ஆயினும் சிங்களவரின் வரலாறு கி.மு. 543ல் விசயனின் வருகையுடன் ஆரம்பிக்கிறது. விசயன் என்பவர் மேற்கு வங்காளத்தின் ரார் பகுதியின் தென்மேற்குப் பகுதியிலிருந்து வந்தவர். இவர் தனது 700 தோழர்களுடன் எட்டுக் கப்பல்களில் 860 கடல் மைல் தூரம் பயணித்து இலங்கையை அடைந்தார். இவர் மன்னாருக்கு அருகே தம்பபன்னி எனும் அரசை உருவாக்கினார். தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம், ராசாவலிய போன்ற நூல்களில் குறிப்பிடப்படும் ஏறக்குறைய 189 மன்னர்களில் இவர் முதலாமவர். கி.மு. 380ல் பண்டுகாபயன் ஆட்சியின்போது இலங்கை அரசு அனுராதபுரத்துக்கு நகர்ந்தது. அன்றிலிருந்து ஏறக்குறைய 1,400 ஆண்டுகளுக்கு நாட்டின் தலைநகராக அனுராதபுரம் விளங்கியது. பண்டைய இலங்கையர் குளங்கள், தாகபைகள் மற்றும் மாளிகைகள் போன்ற கட்டுமானங்களை அமைப்பதில் சிறந்து விளங்கினர். தேவநம்பிய தீசன் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்து புத்த மதத்தின் வருகையால் இலங்கையின் சமூகக் கட்டமைப்பு பெரிய மாற்றமடைந்தது. கிமு 250ல், மௌரியப் பேரரசர் அசோகனின் மகனான மகிந்த தேரர், புத்த மதத்தைப் பரப்பும் நோக்குடன் மிகிந்தலைக்கு வந்தார். இவரது முயற்சியால் தேவநம்பியதீசன் புத்த மதத்தைத் தழுவியதோடு ஏனைய சிங்கள மக்களும் புத்த மதத்தைத் தழுவிக்கொண்டனர். இலங்கையில் தொடர்ந்து வந்த அரசுகள் பெரும் எண்ணிக்கையிலான புத்தப் பள்ளிகளையும் மடாலயங்களையும் பராமரித்ததோடு தென்கிழக்காசியாவின் ஏனைய நாடுகளுக்குப் புத்த மதம் பரவவும் உதவி புரிந்தன. இலங்கைப் பிக்குகள், இந்தியாவின் புகழ்பெற்ற பண்டைய புத்தப் பல்கலைக்கழகமான நாலந்தாப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றனர். நாலந்தாவின் பல ஆக்கங்கள் இலங்கையின் மடாலயங்களில் இன்றும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. கி.மு. 245ல், பிக்குணி சங்கமித்தை போதிமரக் கிளையுடன் இலங்கை வந்தார். இக்கிளை, கௌதம புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் பகுதியாகக் கருதப்படுகிறது. இதுவே உலகில் மனிதரால் நடப்பட்ட முதல் மரமாகவும் கருதப்படுகிறது. புத்தரின் பல் உள்ள கோவில் கண்டியில் உள்ளது.

இலங்கை அரசு, அதன் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு கால வரலாற்றில் அதன் தென்னாசிய அண்டை அரசுகளான சோழ, பாண்டிய, சேர, பல்லவ அரசுகளால் குறைந்தது எட்டு முறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய ஒடிசாவாகிய கலிங்க நாடு, மலாயத் தீபகற்பம் ஆகியவற்றிலிருந்தும் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆசியாவின் முதல் பெண் ஆட்சியாளரைக் கொண்ட நாடாகிய இலங்கையில், கி.மு. 47-42 காலப்பகுதியில் அரசி அனுலா இலங்கையை ஆட்சிபுரிந்துள்ளார். பழங்கால இலங்கை உலகிலேயே முதலாவது மருத்துவமனையைக் கொண்டிருந்தது. இது 4ம் நூற்றாண்டில் மிகிந்தலையில் நிறுவப்பட்டது. "வானில் அமைந்த கோட்டை" என வர்ணிக்கப்படும் சிகிரியா கிபி 477லிருந்து 495வரை ஆண்ட முதலாம் காசியப்பனால் கட்டப்பட்டது. சிகிரியாக் கோட்டை பெரிய மதில்சுவர்கள் மற்றும் அகழிகளால் சூழப்பட்டது. இப் பாதுகாப்பு அரணுக்குள் பூந்தோட்டங்கள், குளங்கள், மண்டபங்கள், மாளிகைகள் மற்றும் ஏனைய கட்டடங்கள் காணப்பட்டன. 1600 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த சிகிரியா ஓவியங்கள் பண்டைய இலங்கையின் கலைச் சிறப்பை வெளிக்காட்டுகின்றன.இது உலகின் பண்டைக்கால நகரத் திட்டமிடலின் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இது இலங்கையில் உள்ள ஏழு உலக மரபுரிமைக் களங்களில் ஒன்றாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, கோடைகாலத்துக்கென மழைகால நீரைச் சேமித்து வைக்கக்கூடிய பெரிய நீர்த்தேக்கங்கள் மற்றும் வாய்க்கால்களும் குறிப்பிடத்தக்க கட்டடக்கலைச் சிறப்புக்களாகும். இலங்கையின் அரசு வரலாறு கிமு 543லிருந்து கிபி 1815 வரையிலான 2359 வருட கால அளவைக் கொண்டது. 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியரும், டச்சுக்காரரும் இந்நாட்டை ஆட்சி செய்த பின்னர், 1790களில் இத்தீவு பிரித்தானியப் பேரரசின்கீழ் வந்தது. இந்நாட்டின் மத்திய பகுதியிலுள்ள காப்பி, தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு இந்தியாவிலிருந்து தமிழ் வேலையாள்களை பிரித்தானியர்கள் இலங்கைக்கு அழைத்துச் சென்றனர். இதுவே அந்நாடு தேயிலையைப் பெருமளவில் உற்பத்தி செய்ய உதவியது. பிரித்தானிய காலனி ஆதிக்கத்தில் இந்து தமிழர்களுக்கு இவர்கள் ஆதரவு காட்டினார்கள் என்று குற்றம்சாட்டி, பெரும்பான்மையான புத்தமத சிங்களவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த வெறுப்புணர்வானது, அந்நாட்டின் விடுதலைக்குப் பின்னர் கொளுந்துவிட்டெரிந்து இனப் பாகுபாடாக மாறியது, 1980களில் உள்நாட்டுக் கலவரம் வெடிக்கவும் காரணமாகியது. 2009ம் ஆண்டு மே மாதம் முடிந்த இந்தப் போரின் முடிவு நமக்குத் தெரிந்ததே. இதில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இன்று நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளது.   

இனப் போருக்கு முன்னர் பலவகை சிறப்புக்களைக் கொண்டிருந்த இலங்கை நாடு மீண்டும் அச்சிறப்புகளுடன், எல்லா மக்களும் சம நீதியுடன், சம உரிமை பெற்று வாழ வேண்டும் எனச் செபிப்போம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கை திருத்தூதுப் பயணம் குறித்து கொழும்பு துணை ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களிடம், வத்திக்கான் வானொலியின் தமிழ்ப்பிரிவின் தலைவர் அருள்பணி எல் எக்ஸ் ஜெரோம் அவர்கள் நடத்திய நேர்காணலின் ஒரு பகுதியைக் கேட்போம். ஆயர் இம்மானுவேல் அவர்கள், இலங்கை ஆயர் பேரவையின் பல்சமய ஆணையத் தலைவர்.

திருத்தந்தையின் திருத்தூதுப் பயண விளக்கங்களைத் தொடர்ந்து நாளைய நிகழ்ச்சியில் நீங்கள் கேட்கலாம்.  

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி/கூகுள்








All the contents on this site are copyrighted ©.