2015-01-12 15:45:00

திருத்தந்தை – பயங்கரவாதம், கடவுளையும், மனிதரையும் புறக்கணிக்கின்றது


பாரிஸ் படுகொலைகள், மத்திய கிழக்கில் தொடர்ந்து இடம்பெறும் சண்டைகள் போன்றவற்றைத் தூண்டும் சமய அடிப்படைவாதப் போக்கைக் கண்டித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அதேவேளை, இப்படுகொலைத் தாக்குதல்களை நடத்துபவர்கள், பொது மக்களைத் தொடர்ந்து படுகொலை செய்வதற்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்தும் சமயத்தின் மாறுபட்ட வடிவங்களுக்கு அடிமைகளாக உள்ளார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

திருப்பீடத்துக்கான அரசியல் தூதர்களை இத்திங்களன்று வத்திக்கானில் சந்தித்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டு உரையாற்றிய திருத்தந்தை, அடிப்படைவாதப் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்துலக சமுதாயம் ஒரேமனதுடன் செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

இத்தகைய வன்முறைகளை நியாயப்படுத்துவதற்கு தங்களின் விசுவாசத்தை விளக்கமளிக்கும் பயங்கரவாதிகளை முஸ்லிம் தலைவர்கள் கண்டிக்குமாறும்  கேட்டுள்ள திருத்தந்தை, இத்தாக்குதல்கள் புறக்கணிக்கும் கலாச்சாரத்தின் விளைவே  என்றும், இக்கலாச்சாரத்தில் மனிதர்களும், ஏன், கடவுளும்கூட ஒரேயடியாகப் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று கூறினார்.

இரண்டாம் உலகப்போரின் சொல்லமுடியாதப் பாதிப்புக்களின் பயனாக, நாடுகள் மத்தியில் உரையாடலையும் சந்திப்பையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவானதையும், இந்நிறுவனம் உருவாக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவு இவ்வாண்டில் நினைவுகூரப்படுவதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, உலகில் அமைதி ஏற்படுமாறும், அமைதி, மனமாற்றத்தின் கனியே என்றும் கூறினார் திருத்தந்தை.

இளையோர் பற்றிப் பேசும்போது கடந்த ஆகஸ்டில் நான் மேற்கொண்ட எனது கொரியப் பயணத்தைக் குறிப்பிட விரும்புகிறேன், கொரியாவில் ஆறாவது ஆசிய இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இளையோரைச் சந்தித்தபோது, நம் இளையோர் என்ற சொத்துக்களைப் பாதுகாக்கவேண்டிய தேவை பற்றியும் குறிப்பிட்டேன், இந்தப் பெரிய ஆசியக் கண்டத்தின் மக்கள்மீது நான் கொண்டிருக்கும் ஆர்வத்தால் இன்று மாலை மீண்டும் ஆசியாவுக்குப் புறப்படுகிறேன், இலங்கை மற்றும் பிலிப்பீன்ஸ்க்குச் செல்கிறேன் என்று கூறினார் திருத்தந்தை.

மேலும், குடும்பம், குடியேற்றதாரர், அமெரிக்க ஐக்கிய நாடு-கியூபா உரையாடல், எபோலா நோயாளிகள், நவீன அடிமைமுறைகள், உக்ரேய்ன் பிரச்சனை என பல தலைப்புகளில் நீண்ட உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தற்போது திருப்பீடம் 180 நாடுகளுடன் அரசியல் உறவைக் கொண்டுள்ளது. மேலும் இது, 7 ஐ.நா. நிறுவனங்களில் நிரந்தரப் பார்வையாளராகவும் உள்ளது.  

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.