2015-01-12 16:56:00

சமுதாயத்தில் நலிந்தோரில் இயேசுவின் முகத்தைக் கண்டுகொள்வோம்


சன.12,2015. இத்திங்கள் இரவு 7 மணிக்கு இலங்கைக்கும் பிலிப்பீன்ஸ்க்கும் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பயணத்திற்காகச் செபிக்குமாறு அனைவரையும் இஞ்ஞாயிறன்று கேட்டுள்ளார்.

இயேசுவின் திருமுழுக்கு விழாவாகிய இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்களது செபத்தால் என்னோடு பயணம் செய்யுங்கள் என்றும், உரோமையிலுள்ள இலங்கை மற்றும் பிலிப்பீன்ஸ் மக்களும் எனக்காகச் செபியுங்கள் என்றும் கூறினார்.

மழை பெய்ந்துகொண்டிருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் மூவேளை செப உரையைக் கேட்டு ஆசீர் பெறுவதற்காக நின்றுகொண்டிருந்த நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட பயணிகளிடம், இயேசுவின் திருமுழுக்கு விழா பற்றிய சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

இன்று சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் திருமுழுக்கோடு "மூடிய வானங்களின்" நேரம், அதாவது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் பிரிவு முடிந்துவிட்டது, மனிதர் மத்தியில் கடவுள் குடியிருக்கும் இடமாக இந்தப் பூமி மாறிவிட்டது என்று கூறினார் திருத்தந்தை.

நாம் ஒவ்வொருவரும் இறைமகனின் அன்பையும், அவரின் எல்லையில்லா கருணையையும் அனுபவித்து அவரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெறுகிறோம், அவரை அருளடையாளங்களில், நம் சகோதர சகோதரிகளில், குறிப்பாக, ஏழைகள், நோயாளிகள், கைதிகள், புலம்பெயர்ந்தோர் ஆகியோரில் அவரின் முகத்தைக் கண்டுகொள்ள முடியும், அவர்களே, துன்புறும் கிறிஸ்துவின் உயிருள்ள சதை மற்றும் காணக்கூடாத கடவுளின் காணக்கூடிய சாயல் என்றும் கூறினார் திருத்தந்தை.

இயேசுவின் திருமுழுக்கோடு வானங்கள் மட்டும் திறக்கவில்லை, ஆனால் திருமுழுக்குப் பெற்ற இறைமனிதரில் குடியிருக்கும் பேருண்மையை கடவுளின் குரல் அறிவித்தது, மனிதனாகப் பிறந்த இறைமகனான இயேசுவே இறைவார்த்தை என்பதை தந்தையாம் கடவுள் உலகுக்குச் சொல்ல விரும்பினார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த இறைவார்த்தையை உற்றுக்கேட்டு, அவரைப் பின்பற்றி அவருக்குச் சாட்சியாக வாழ்வதால் மட்டுமே, நம் திருமுழுக்கு நாளில் நம்மில் வைக்கப்பட்ட விதையெனும்  நம் விசுவாச அனுபவத்தை முழுவதும் பயனுள்ளதாக ஆக்க முடியும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.