2015-01-12 17:23:00

காந்திஜியின் கோட்பாடுகளை ஐ.நா.கடைப்பிடிக்கும், பான் கி மூன்


சன.12,2015. இவ்வுலகில் வளர்ந்துவரும் தீவிரவாதம், அடிப்படைவாதம், பயங்கரவாதம் ஆகியவை, மகாத்மா காந்தியின் அரசியல் மற்றும் ஆன்மீகக் கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

"7-வது எழுச்சிமிகு குஜராத்' உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா சென்றிருக்கும் பான்-கி-மூன் அவர்கள் இஞ்ஞாயிறன்று புதுடெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது,  சகிப்புத்தன்மையை ஊக்குவிக்கவும், அனைவருக்கும் மாண்பையும் நீதியையும் உறுதி செய்யவும் ஐ.நா. தன்னைத் தொடர்ந்து அர்ப்பணிக்கும் என்றும் உறுதியளித்தார்.

இந்த மாநாடு குஜராத் தலைநகர் காந்தி நகரில் இஞ்ஞாயிறன்று தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார் பான்-கி-மூன்.

அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் அவர் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தையும் பார்வையிடுகிறார். இதனைத்தொடர்ந்து, தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரையும் பான்-கி-மூன் சந்தித்துப் பேசுகிறார் என்றார் வினோத் ராவ்.

இதற்கிடையே, குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் திறந்து வைப்பார் என அந்த மாநில மின்துறை அமைச்சர் சௌரவ் படேல் தெரிவித்தார்.

 ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.