2015-01-12 16:14:00

கடுகு சிறுத்தாலும் – ஆலோசனைகள் சொல்ல ஆயிரம் பேர்


ஒருமுறை பேரரசர் அக்பர், தனது அமைச்சர் பீர்பாலிடம், நமது நாட்டில் பெருமளவான மக்கள் என்ன வேலையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று கேட்டார். சற்றும் சிந்திக்காமல் மருத்துவம் என்று பளிச்சென்று பதில் சொன்னார் பீர்பால். நிச்சயமாக அது இல்லை என கோபத்துடன் அக்பர் அதை மறுக்க, மன்னிக்க வேண்டும் மன்னா, எனக்கு சற்று அவகாசம் கொடுங்கள், எனது கருத்து உண்மையென நிரூபிக்கிறேன் என்று சொன்னார் பீர்பால். நாள்கள் நகர்ந்தன. அக்பர் அன்று நடந்ததை மறந்தே போய்விட்டார். ஒரு நாள் ஒரு முக்கிய பிரச்சனையை விவாதிப்பதற்காக அமைச்சரவை கூட்டப்பட்டது. அன்று பீர்பால் வரவில்லை. அவருக்கு தலைவலி, கடும் காய்ச்சல் என்று சொன்னார்கள். தலைவலிக்குத் தைலத்தைத் தடவச் சொல்லி அவரைக் கட்டாயம் இங்கு அழைத்து வாருங்கள் என்றார் மன்னர். பீர்பாலும் கனத்த கம்பளியைப் போர்த்தியபடி நடுங்கிக்கொண்டே அரண்மனைக்குள் நுழைந்தார். முதலில் அவரைக் கவலையுடன் நலம் விசாரித்த காவல்காரர் காய்ச்சல் நீங்க மருந்து சொன்னார். மற்றோர் ஊழியர், அஞ்சால் அலுப்பு மருந்து சாப்பிட்டால் சரியாகும் என்றார். அடுத்து, சமையல்காரர், கொள்ளு இரசம் சாப்பிட்டால் காய்ச்சல் சரியாகும் என்றார். இப்படி ஒவ்வொருவரையும் சமாளித்து அரசவைக்குள் நுழைந்தார் பீர்பால். இவர் நடுங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்த அக்பர் பதறிப்போய், இந்த அளவு காய்ச்சல் என்று தெரியாது என்று சொல்லி, உடனே காவலரை அழைத்து புகழ்பெற்ற நாட்டு வைத்தியரை அழைத்துவரச் சொன்னார். உடனே பீர்பால் சிரித்துக்கொண்டே போர்வையை நீக்கி 121 என்று சப்தமாகச் சொன்னார். அது என்ன 121 என்று அக்பர் கேட்க, நான் வீட்டிலிருந்து கிளம்பியது முதல் இதுவரை எனக்கு வண்டிக்காரர், வணிகர், விவசாயி, சமையல்காரர், பூக்கடைக்காரர், காய்கறிக்கடைக்காரர் என மருத்துவம் சொன்னவர்களின் எண்ணிக்கை 121 என்றார். இவர்கள்தான் எனக்கு மருத்துவம் சொல்கிறார்கள் என்றால் நாடாளவேண்டிய மன்னரும் அப்படித்தான், இப்போது சொல்லுங்கள், நாட்டில் பெருமளவான மக்கள் என்ன வேலையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று கேட்டார் அமைச்சர் பீர்பால்.

 

ஆளாளுக்கு மருத்துவம் சொல்வது உயிருக்கே ஆபத்தாகலாம்.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.