2015-01-10 16:33:00

போக்கோ ஹாரம் அண்மைத் தாக்குதல்களில் 2000 பேர் உயிரிழப்பு


சன.10,2015. நைஜீரியாவில் போக்கோ ஹாரம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் இவ்வாரத்தில் நடத்திய தாக்குதல்களில் இறந்துள்ளவர்களின் எண்ணிக்கையை உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்று அந்நாட்டுத் தலத்திருஅவைத் தலைவர் கூறினார்.

போக்கோ ஹாரம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் இவ்வாரத்தில் நடத்திய வன்முறைத் தாக்குதல்களையடுத்து, அந்நாட்டு இராணுவம் இச்சனிக்கிழமையன்று தீவிரவாதிகளுடன் போரிட்டுவரும்வேளை வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Kaigama அவர்கள் இவ்வாறு கூறினார்.

அந்நாட்டில் போக்கோ ஹாரம் குழு, இப்புதனன்று Baga நகர்மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கில் அல்லது ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன, ஆனால் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லையென பேராயர் Kaigama மேலும் கூறினார்

இதற்கிடையே, போக்கோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்தியுள்ள அண்மைத் தாக்குதல்களில் ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல ஆலயங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன என்று அபுஜா உயர்மறைமாவட்ட சமூகத் தொடர்பு மைய இயக்குனர் அருள்பணி Patrick Tor Alumuki கூறினார்.

Baga பகுதியைவிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர் எனவும், பன்னாட்டு அமைதி காக்கும் இராணுவப்பணி மையத்தையும் போக்கோ ஹாரம் குழு கைப்பற்றியிருப்பதாகவும் அருள்பணி Patrick கூறினார்.

நைஜீரியாவில், வருகிற பிப்ரவரியில் அரசுத்தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளவேளை, அரசு இவ்வன்முறையில் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கையைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை என்றும் அருள்பணி Patrick, பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

போக்கோ ஹாரம் குழு, லிபியா மற்றும் மாலி நாடுகளிலிருந்தும் ஆட்களைத் தனது குழுவில் சேர்ப்பதாகவும் அருள்பணி Patrick குறை கூறினார்.

 ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.