2015-01-10 16:40:00

குடியேற்றதாரரின் உண்மையான நிலையைக் கண்டறிய வேண்டும்


சன.10,2015. குடியேற்றதாரர் விவகாரத்தில் அனைத்துலக சட்டத்தை மதிக்கவும், சட்டங்களை அமல்படுத்துவதற்கும் உதவியாக, குடியேற்றதாரரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு முன்னர் அவர்கள் சொல்வதற்குச் செவிசாய்க்குமாறு இஸ்பானிய அரசிடம் கூறியுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

குடியேற்றதாரரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு முன்னர், அவர்களுக்கு உண்மையிலேயே புகலிடம் தேவைப்படுகிறதா அல்லது அவர்கள் வன்முறைக்கு அல்லது மாஃபியா குற்றக்கும்பலின் வர்த்தகத்துக்குப் பலியானவர்களா என்பதை அறிய வேண்டியது அவசியம் என இஸ்பானிய ஆயர்கள் கூறியுள்ளனர்.

இம்மாதம் 18ம் தேதி இஸ்பெயினில் கடைப்பிடிக்கப்படவுள்ள உலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினத்திற்கென அந்நாட்டு ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் ஆணையத் தலைவர் ஆயர் Ciriaco Benavente அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு அரசை வலியுறுத்தியுள்ளார்.

இத்தாலியின் லாம்பெதுசா, அமெரிக்காவின் அரிசோனா ஆகிய இரு இடங்களுடன் இஸ்பெயினும் குடியேற்றதாரர் அதிகமாக வந்திறங்கும் இடங்களாக உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஆயர், இஸ்பெயினில் தற்போது ஏறக்குறைய 50 இலட்சம் வெளிநாட்டவர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர் எனக் கூறினார்.

“எல்லைகள் இல்லாத திருஅவை, அனைவருக்கும் தாய்” என்ற தலைப்பில் இஸ்பானியத் திருஅவை இவ்வுலக தினத்தைச் சிறப்பிக்கின்றது.

 ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.