2015-01-09 15:10:00

ஹெய்ட்டி நிலநடுக்கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவுக் கூட்டம்


சன.09,2015. கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்ட ஐந்தாம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு, வத்திக்கானில் இச்சனிக்கிழமையன்று கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

“திருஅவையின் ஒருமைப்பாட்டுணர்வு : ஹெய்ட்டியில் நிலநடுக்கம் இடம்பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குப் அதன் நினைவுகளும் நம்பிக்கையும்” என்ற தலைப்பில் நடைபெறும் இக்கூட்டத்தின் ஒரு நிகழ்வாக இதில் பங்கு கொள்ளும் பிரதிநிதிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் சந்திப்பார்கள்.

திருப்பீடத்தின் Cor Unum பிறரன்பு அமைப்பு, திருப்பீட இலத்தீன் அமெரிக்க அவை, ஹெய்ட்டி ஆயர்கள் பேரவை ஆகியவற்றின் முயற்சியினால் நடத்தப்படும் இக்கூட்டத்தில் 200 பேர் தங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

2010ம் ஆண்டு சனவரி 12ம் தேதி ஹெய்ட்டியில் இடம்பெற்ற கடும் நிலநடுக்கத்தில் 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்தனர், மூன்று இலட்சம் பேர் காயமடைந்தனர் மற்றும் 12 இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.

இந்த நிவாரணப் பணியில் திருஅவையின் முயற்சியினால் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, இன்னும் ஏறக்குறைய 200 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன என்று ஹெய்ட்டி கர்தினால் Chibly Langlois அவர்கள் கூறினார். வத்திக்கானில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கென ஹெய்ட்டிலிருந்து 12 பேர் உரோம் வந்துள்ளனர்.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.