2015-01-09 14:48:00

திருத்தந்தை - தூய ஆவி நம் இதயங்களை இறைவனின் அன்புக்குத் திறக்கிறார்


சன.09,2015. ஆயிரக்கணக்கான மறைக்கல்வி வகுப்புகளோ, யோகா அமர்வுகளோ அல்லது சென் ஆன்மீகப் பயிற்சிகளோ அல்ல, ஆனால் தூய ஆவியே நம் இதயங்களை இறைவனுக்கும், அவரின் அன்புக்கும் திறக்கும் வல்லமையைக் கொண்டிருக்கிறார் என்று இவ்வெள்ளியன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு கடலில் நடந்து வருவதைக் கண்ட திருத்தூதர்கள் எவ்வாறு அச்சம் கொண்டனர் என்பதைக் கூறும் இவ்வெள்ளி திருப்பலி நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, திருத்தூதர்களின் இதயங்கள் கடினப்பட்டு இருந்ததே அவர்கள் பயந்து நடுங்கியதற்கான காரணம் என்று கூறினார்.

இவ்வெள்ளி காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, ஒருவரின் வாழ்வில் ஏற்பட்ட வேதனையான அனுபவம் போன்று, ஒருவரின் இதயத்தைக் கடினப்படுத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும், அதோடு மனிதர் தங்களுக்குள்ளே வாழ்பவர்களாக இருந்தாலும் அவர்களின் இதயங்கள் கடினப்படும் என்றும் கூறினார்.

வீண் தற்பெருமை, தன்னிறைவு, பாதுகாப்பற்றநிலை போன்ற காரணங்களாலும் ஒருவரின் இதயம் கல்லாக மாறும் என்றும், இதயம் கல்லாக மாறும்போது அது சுதந்திரமாக இருக்காது, அப்போது அதனால் அன்புகூர முடியாது, நிறைவான அன்பு அச்சத்தை அகற்றுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

அன்புகூருவது எவ்வாறு என்பதையும், நம் கடின இதயங்களிலிருந்து நாம் விடுதலையடையவும் தூய ஆவி நமக்குக் கற்பிக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.

நீங்கள் ஆயிரக்கணக்கான மறைக்கல்வி வகுப்புகளையும், ஆயிரக்கணக்கான யோகா அமர்வுகளையும், ஆயிரக்கணக்கான சென் ஆன்மீகப் பயிற்சிகளையும்  பின்பற்றலாம், ஆனால் இவற்றில் எதுவுமே நீங்கள் கடவுளின் குழந்தை என்ற சுதந்திரத்தை உங்களுக்கு வழங்க இயலாது, மாறாக, தூய ஆவி ஒருவரே கடவுளை, அப்பா என அழைப்பதற்கு உதவுகிறார் என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.