2015-01-08 17:59:00

வாரம் ஓர் அலசல் - பெரிய கதவுகளைத் திறக்கும் சிறு சாவிகள்


சன.05,2015. இத்திங்கள் காலையில் யாகூ இத்தாலிய இணையப் பக்கத்தைச் சொடுக்கியபோது ஒரு புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த டிசம்பர் 31ம் தேதி கோரியேரா இணையத்தில் பிரசுரமான இப்புகைப்படத்தை இதுவரை முகநூலில் பார்த்துள்ள வாசகர்களின் எண்ணிக்கை நாற்பது கோடியைத் தாண்டியுள்ளது. இப்புகைப்படத்தில், 28 வயது இளைஞர் ஒருவர், அனைத்தையும் மறந்தது போன்ற நிலையிலுள்ள வயதான தனது பாட்டியை தனது கரங்களில் தூக்கி அணைத்துக் கொண்டிருக்கிறார். “எனது வாழ்வில் இதைவிட சிறந்த டிசம்பர் 31ம் தேதி இருக்க இயலாது. இச்செயலும் எனது வாழ்வின் ஓர் அங்கமே. நான் சிறுபிள்ளையாய் இருக்கும்போது என்னைத் தூக்கி வளர்த்த இக்கரங்களுக்கு நான் காட்டும் அன்பு இது. எனது பாட்டிக்கு நான் சொல்லும் 2015ம் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இது” என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. இந்த இளைஞரின் இந்தச் சிறு நற்செயல் கோடிக்கணக்கான வாசகர்களின் மனங்களை மாற்றியிருக்கின்றது. ஆம். சிறிய செயல்கள் உலகையே மாற்றவல்லன. இத்திங்கள் காலையில் உரோம் மாநகரப் பேருந்தில் ஒரு மூதாட்டி செய்த ஒரு சிறுசெயல் எனக்குள் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தது. அலுவலகம் செல்வதற்காக பேருந்தில் ஏறியபோது கொஞ்சம் நிற்க இடம் கிடைத்தால் போதும் என்ற நிலை. நிறுத்தத்திலிருந்து பேருந்து நகரத் தொடங்கிய சிறிது நேரத்திற்குள் ஒரு மூதாட்டி, தனது கைப் பையை நகர்த்தி எனது பையை அங்கு வைக்கச் சொன்னார். பையை வைத்துவிட்டு அந்த மூதாட்டியை நன்றியோடு பார்த்தேன். பின்னர் அவரே சற்று நகர்ந்து எனக்கும் அவரது இருக்கையில் உட்கார கொஞ்சம் இடம் கொடுத்தார். நிறம் கொஞ்சம் கம்மியாய் இருக்கும் வெளிநாட்டவரைப் பார்த்துச் சிலர் முகம் சுளிக்கும் இந்தச் சமுதாயத்தில், இந்த மூதாட்டியின் இந்தச் சிறுசெயலை எண்ணி மகிழ்ந்தேன். சிறிய நற்செயல்கள்தான் எத்தனை மதிப்பு மிக்கவை! அவை எவ்வளவு பெரிய நல் சிந்தனைகளையும், நல்மாற்றங்களையும் நம்மில் ஏற்படுத்துகின்றன!

பீட்டர் மார்ஷல் என்பவர் சொன்னார் - திட்டமிடப்பட்ட பெரிய காரியங்களைவிட, ஆற்றப்பட்ட சிறிய காரியங்கள் சிறந்தவை என்று. இதையொத்த சிந்தனைகளையே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார். "நாம் ஒவ்வொருவரும் பிறருக்கு, குறிப்பாக, குடும்பங்களில் பிரச்சனைகளால் அல்லது பலவகையான கருத்து முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உடன்பிறப்பு உணர்வுமிக்க செயல்களைச் செய்வதில் நம்மை ஈடுபடுத்த வேண்டும். மனிதர் ஒளியைப் பற்றி அதிகம் பேசுகின்றனர், ஆனால் அவர்கள் இருளின் அமைதியில் ஏமாற்றப்படவே அடிக்கடி விரும்புகின்றனர், ஏனெனில் வெளிச்சம் அவர்களின் தீய செயல்களை வெளிப்படையாகக் காட்டிவிடும், ஆயினும், சிறிய செயல்கள் மிகுந்த மதிப்புமிக்கவை. அவை நம்பிக்கையை கொடுக்கும் விதைகளாக அமையக்கூடும். அச்செயல்கள் அமைதியின் பாதைகளையும், அதற்குரிய வாய்ப்புக்களையும் திறக்கும்"

என்று திருத்தந்தை கூறினார். திருத்தந்தை அமைதி பற்றியும் கூறினார்...

"மனிதர் அமைதி பற்றி அதிகம் பேசுகின்றனர், ஆனால் அவர்கள் அடிக்கடி போரையே விரும்புகின்றனர் அல்லது அதற்கு உடந்தையாக அமைதியாக இருந்து விடுகின்றனர் அல்லது அமைதியைக் கட்டியெழுப்புவதற்குத் திட்டவட்டமாக எதுவும் செய்வது கிடையாது. ஒவ்வொரு மனிதரும் அமைதிக்காகப் பசித்திருக்கின்றனர், அமைதிக்காகத் தாகம் கொண்டிருக்கின்றனர். அமைதி என்பது போர் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல, மனிதர் தன்னோடும், இயற்கையோடும் பிறரோடும் நல்லிணக்கத்தில் வாழ்வதாகும். அமைதி இன்றி எதிர்காலம் கிடையாது. அமைதியைக் கட்டியெழுப்புவது உடனடியாக தேவைப்படுகிறது.

அன்பர்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பது போன்று, உலகில் அமைதி போன்ற பெரிய செயல்கள் நடப்பதற்கு நாம் செய்யும் சிறு சிறு நல்ல செயல்களும் உதவி செய்யும். இச்சிறு செயல்கள் பிறரின் பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்கி அவர்கள் வாழ்வு நிம்மதி பெற பெரிதும் உதவும். 1892ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டு Stanford பல்கலைக்கழகத்தில் நடந்த ஓர் உண்மை நிகழ்வை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அப்பல்கலைக்கழகத்தில் படித்த 18 வயது மாணவர் ஒருவரும் அவரது நண்பரும் கல்லூரிக்கு கட்டணத்தைச் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டனர். 18 வயது மாணவர் ஓர் அநாதை. ஓர் இசைக்கச்சேரி நடத்தி அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு படிப்புக்கு ஆகும் பணத்தைச் செலுத்திவிடலாம் என்று இவர்கள் திட்டமிட்டு அதற்குத் தயார் செய்தனர். அக்கச்சேரிக்கு, புகழ்பெற்ற பியானோ இசைமேதை Ignacy J. Paderewski அவர்களை வரவழைக்க விரும்பி அவரின் நிர்வாகியை அணுகினர். அவரோ அதற்கு இரண்டாயிரம் டாலர் கேட்டார். சரி என ஒத்துக்கொண்டு கச்சேரிக்கும் இவ்விளைஞர்கள் தயார் செய்தனர். குறிப்பிட்ட அந்நாளும் வந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்கவில்லை. 1,600 டாலருக்கு மட்டுமே அவர்களால் விற்க முடிந்தது. Stanfordல் Paderewski அவர்களின் கச்சேரியும் சிறப்பாக நடந்து முடிந்தது. பின்னர் அவரிடம் இவ்விரு மாணவர்களும் தாங்கள் திரட்டிய 1,600 டாலரையும் கொடுத்தனர். அதோடு, மீதமுள்ள 400 டாலரையும் விரைவில் கொடுத்துவிடுவதாக ஒரு தாளில் எழுதிக் கொடுத்தனர். அதை வாங்கிய Paderewski அவர்கள், இதனை ஒத்துக்கொள்ள முடியாது என்று சொல்லி அத்தாளைக் கிழித்துப் போட்டார். பின்னர் அம்மாணவர்களிடம், இக்கச்சேரி நடத்துவதற்கு உங்களுக்குச் செலவான தொகையையும், எஞ்சியுள்ள பணத்தில் ஆளுக்கு 10 விழுக்காடும் எடுத்துக்கொள்ளுங்கள். மீதமுள்ள தொகையை என்னிடம் கொடுத்தால் போதும் என்று கூறினார் அவர். இந்த மனிதரின் கருணைச் செயல் கண்டு வியந்த அம்மாணவர்கள் அவருக்கு மனதார நன்றி கூறினர்.

இருபது ஆண்டுகள் கடந்தன. முதல் உலகப்போர் தொடங்கியது. அச்சமயம் போலந்து நாட்டின் பிரதமராக இருந்தார் அந்த பியானோ மேதை Paderewski. போர் முடிந்தபோது போலந்து நாடு சுக்கு நூறானது. போலந்தில் 15 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பசியால் வாடினர். அவர்களுக்கு உணவளிக்கப் பிரதமரிடம் பணம் இல்லை. எனவே அவர் அமெரிக்க ஐக்கிய நாட்டு உணவு மற்றும் நிவாரண நிர்வாகத்தை அணுகினார். அதன் தலைவராக இருந்த Herbert Hoover என்பவர், உடனடியாக போலந்துக்கு உணவுப்பொருள்களைக் கப்பலில் அனுப்பி வைத்தார். இதனால் போலந்தில் உணவுப் பஞ்சம் நீங்கியது. எனவே Paderewski அவர்கள் நன்றி கூறுவதற்காக அமெரிக்கா சென்றார். அப்போது அமெரிக்க அரசுத்தலைவராக இருந்தவர் Herbert Hoover. Paderewski அவர்கள் நன்றி சொல்லத் தொடங்கியவுடனே இடைமறித்த Hoover அவர்கள், “நீங்கள் எனக்கு நன்றி சொல்லக் கூடாது. நீங்கள் ஒன்றை மறந்திருக்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் நீங்கள் உதவி செய்த இரு கல்லூரி மாணவர்களில் நானும் ஒருவன் என்று சொன்னார். ஆம் அன்பர்களே, சிறிய நல்ல செயல்களும் பெரிய கதவுகளைத் திறக்கவல்லன.

ஒருநாள் மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தெரு ஒன்றில் டீக் கடையில் எல்லாரும் காப்பி குடித்துவிட்டு, அந்தக் காகிதக் கப்பை கீழே போட்டுவிட்டுச் சென்றார்கள். அச்சமயம் அங்கு பேருந்துக்காக நின்றப் பள்ளிச் சிறுவன் ஒருவன் அந்தக் கப்புகளை ஒவ்வொன்றாக எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுக்கொண்டிருந்தான். இதைப் பாரத்த சிலர் சிரித்தனர். ஆனால் ஒரு பள்ளி மாணவி அச்சிறுவனோடு சேர்ந்து கப்புகளை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டார். பின்னர் இன்னும் இரு மாணவிகள் அவர்களோடு சேர்ந்து செய்தனர். அதன் பின்னர் காப்பி கப்பைக் கீழே போட்டவர்கள்கூட அதை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டனர். இப்படி உலகிலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய நற்செயல் செய்தால் இந்த உலகம் சிறந்த இடமாக மாறும் அல்லவா. இன்று உலகில் எத்தனையோ பேர் தினமும் சிறு சிறு நற்செயல்களைச் செய்து வருகின்றனர். நேயர்களே, உங்களில்கூட பலர் இந்தப் பட்டியலில் இணைந்திருக்கலாம்.

ஒரு சிறிய நற்செயலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுக்களைச் சொல்லலாம். Taylor Marie Crabtree என்ற ஏழு வயதுச் சிறுமி, TayBear நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் என்றால் நம்புவதற்குச் சற்று கடினமாகத்தான் இருக்கிறது. இச்சிறுமி, தலைமுடியை ஒதுக்குவதற்கும், அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஹேர் கிளிப்புகளைத் தயாரித்து அவற்றுக்கு வர்ணம் பூசி, அவற்றை உள்ளூர்க் கடைகளில் விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு பொம்மைகள் வாங்கி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறார்க்கு அளித்து வருகிறார். இச்சிறுமி தனது தாயிடம், புற்றுநோய்ச் சிறார் மிகுந்த வருத்தமாக இருப்பார்கள். இவர்களை மகிழ்ச்சிப்படுத்த ஏதாவது செய்ய விரும்பினேன், அதனால்தான் ஹேர் கிளிப்புகளைச் செய்கிறேன் எனக் கூறியுள்ளார். இச்சிறுமியின் இச்சேவையை அறிந்த பலர் பல வழிகளில் உதவிக்கரம் கொடுத்து வருகின்றனர். இச்சிறுமி ஆயிரத்துக்கு மேற்பட்ட ஹேர் கிளிப்புகளை விற்றுள்ளார். 700 teddy bear பொம்மைகளை வாங்கவேண்டுமென்பது அவரது திட்டமாம். இணையதளம் மூலமாகவும் ஆர்டர்களைப் பெற்று வருகிறார் Taylor Marie.

அன்பு நெஞ்சங்களே, நாமும் இந்தப் புதிய ஆண்டில் தினமும் சிறு சிறு நற்செயல்கள்  செய்யத் தொடங்குவோம். பயணம் செய்யும்போது, நீங்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகளை உங்களைவிட தேவைப்படும் வேறு ஒருவருக்கு விட்டுக்கொடுக்கலாம். நீங்கள் உங்கள் வேலையை முழுவீச்சுடன் செய்து கொண்டிருக்கும்போது யாராவது ஒருவர் உதவி கேட்டால் வேலைப் பளுவைப் பாராமல் அவருக்கு உதவி செய்யலாம், சாலையைக் கடக்கக் கஷ்டப்படும் ஒருவருக்கு உதவலாம், செல்லும் வழியில் யாரும் கண்ணீர் சிந்துவதைப் பார்த்தால், அதைப் புறக்கணித்துவிட்டுச் செல்லாமல் அவர்களின் கவலை கரைய உதவலாம், பயன்படுத்திய புத்தகங்களை இல்லாதவர்களுக்குக் கொடுக்கலாம். எல்லாரையும் புன்சிரிப்புடன் சந்திக்கலாம்... மின்னணுக் கருவிகளை தேவையற்றுப் பயன்படுத்தாமல் இருந்து மின்சாரத்தைச் சேமிக்கலாம்... இப்படி எத்தனையோ சிறு சிறு நற்செயல்கள் செய்யலாம். ஆம். சிறு சிறு நல்ல செயல்களும் பெருமதிப்புமிக்கவை. அச்செயல்கள் உலகையே மாற்றவல்லவை. Lao Tzu அவர்கள் சொன்னது போன்று, பெரிய செயல்கள், சிறிய செயல்களால் ஆனவை. சிறிய சாவிகள்தானே பெரிய கதவுகளைத் திறக்கின்றன!

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.