2015-01-08 16:43:00

பாரிஸ் வன்முறை அமைதியை விரும்பும் அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்துள்ளது


சன.08,2015. பாரிஸ் நகருக்காகச் செபிக்குமாறு, இவ்வியாழன் காலையில் தனது டுவிட்டரில் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், பாரிஸ் நகரில் இப்புதன் நடுப்பகல் வேளையில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய இப்படுகொலையைக் கண்டித்து, பாரிஸ் கர்தினால் André Vingt-Trois அவர்களுக்கு, தந்திச் செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வன்முறை, அமைதியை விரும்பும் அனைத்து மனிதர்களின் மனங்களையும் அதிர்ச்சியுறச் செய்துள்ளது எனவும், இதில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் அனைவரோடும் மனத்தளவில் ஒன்றித்துச் செபிக்கும் உலகத்தினர் அனைவரோடும் தானும் இணைந்து செபிப்பதாகவும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.

மனித உயிரை மதிக்க மறுக்கும் அனைத்து முயற்சிகளையும் முறியடிப்பதற்கு, நல்மனம் கொண்டோர் இணைந்து வரவேண்டும் என்ற வேண்டுகோளையும் திருத்தந்தை தனது செய்தியில் விடுத்துள்ளார்.

இத்தந்திச் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

மேலும், பாரிஸ் கர்தினால் André Vingt-Trois அவர்களும், இத்தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனமானவை என்று கூறி, சமுதாயத்தில் ஒருவர் ஒருவரை மதித்து அமைதியில் வாழும் உறவுகளைக் கட்டியெழுப்புமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.