2015-01-08 16:58:00

திருத்தந்தையின் 2வது ஆசியத் திருத்தூதுப் பயணம்


சன.08,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசியாவுக்கு இரண்டாவது தடவையாக மேற்கொள்ளவிருக்கும் இத்திருத்தூதுப் பயணம், அவர் இந்தப் பெரிய கண்டத்தின்மீது கொண்டிருக்கும் அக்கறையையே காட்டுகின்றது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சனவரி 12, வருகிற திங்கள் இரவு 7 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடங்கும் அவரின் இரண்டாவது ஆசியத் திருத்தூதுப் பயணம் பற்றி பத்திரிகையாளரிடம் விளக்கிய இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் இவ்வாறு கூறினார்.

கடந்த ஆகஸ்டில் தென் கொரியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, மீண்டும் ஆசியாவுக்குச் செல்லவிருப்பதன் முக்கியத்துவத்தை விளக்கிய  அருள்பணி லொம்பார்தி அவர்கள், திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் ஆசியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள இயலாமல் போனதால், ஒரு திருத்தந்தையின் பிரசன்னம் ஆசியாவுக்குத் தேவைப்படுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்தப் பயணம் அமைந்துள்ளது என்று கூறினார்.

சனவரி 13, வருகிற செவ்வாயன்று இலங்கையின் கொழும்புவில் தனது இந்த இரண்டாவது ஆசியத் திருத்தூதுப் பயண நிகழ்வுகளைத் தொடங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ். இலங்கையில் 48 மணி நேரப் பயண நிகழ்வுகளை நடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 15ம் தேதி வியாழன் காலை 9 மணிக்கு கொழும்புவிலிருந்து பிலிப்பீன்ஸ்க்குப் புறப்படுவார். அன்று மாலை 5.45 மணிக்கு மனிலா சென்றடையும் திருத்தந்தை, அந்நாட்டில் பயண நிகழ்வுகளை நிறைவு செய்து 19ம் தேதி மாலை 5.40 மணிக்கு உரோம் வந்தடைவார். 

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.