2015-01-08 16:49:00

திருத்தந்தை - அன்பு இறைவனிடம் இட்டுச் செல்கின்றது


சன.08,2015. கிறிஸ்தவ அன்பு, வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டால் மட்டும் போதாது, மாறாக அவ்வன்பு செயல்களில் தெளிவாக வெளிப்படுத்தப்பட வேண்டுமென்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 08, இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, இறைவன் அன்பு நிறைந்த பாதையில் வழிநடத்துகிறார் மற்றும் அன்பின் வழியாக நாம் இறைவனை அறிகிறோம் என்றும் கூறினார்.

இவ்வாண்டின் இக்காலத்தில் திருவழிபாட்டில் இடம்பெறும் முக்கிய வார்த்தையாகிய வெளிப்படுத்துதல் குறித்த சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, மூன்று கீழ்த்திசை ஞானிகளுக்குத் திருகாட்சியில், திருமுழுக்கில், கானாவூர் திருமணத்தில் இயேசு தம்மை வெளிப்படுத்தினார் என்று கூறி, நாம் எப்படி இறைவனை அறிய முடியும் என்ற கேள்வியையும் எழுப்பினார்.

இறைவனே அன்பு, அன்பின் பாதையில் இறைவனை நாம் அறிய வருகிறோம், அன்பை அறியாதபோது நாம் எப்படி அன்புகூர முடியும் என்றும் கேட்டுள்ள திருத்தந்தை, அன்பு கடவுளிடமிருந்து வருவதால் நாம் ஒருவர் ஒருவரை அன்புகூர வேண்டுமென்றும் கூறினார்.

கடவுளின் அன்பு எப்போதும் நமக்காகக் காத்திருக்கின்றது, அவ்வன்பு எப்போதும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது, நம்மை மிகவும் அன்புகூரும் நம் வானகத்தந்தை நம்மை மன்னிப்பதற்கு எப்போதும் தயாராக இருக்கிறார், இதனை உணருவதற்கு வரங்களை இறைஞ்சுவோம் என்று கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.