2015-01-08 16:53:00

எபோலா நோயாளிகளுக்கு தலத்திருஅவைகள் ஆற்றும் சேவைக்குப் பாராட்டு


சன.08,2015. எபோலா உயிர்க்கொல்லி நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கினி, லைபீரியா, சியெரா லியோன் ஆகிய நாடுகளின் கத்தோலிக்கத் தலத்திருஅவைகள் இந்நோய் நெருக்கடிகளுக்கு ஆற்றிவரும் மகத்தான சேவையைப் பாராட்டியுள்ளது திருப்பீடம்.

இந்த மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் எபோலா நோயாளிகள் மத்தியில் தலத்திருஅவைகள் ஆற்றிவரும் பணிகளை மேலும் ஊக்குவித்து உறுதிப்படுத்தும் நோக்கத்தில் நிதி உதவி செய்வதாகவும் அறிவித்துள்ளது திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை.

எபோலா நோய்ப் பாதிப்பால் கடுமையாய்த் துன்புறும் நம் சகோதர சகோதரிகளுடன் ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டும் விதமாக, தனியாகவோ, குழுவாகவோ நிதி உதவி வழங்கப்படுவதையும் ஊக்குவித்துள்ளது திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை.

இந்தப் பாராட்டு அறிக்கையை வெளியிட்டுள்ள திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை, கத்தோலிக்கத் தலத்திருஅவை இந்நோயாளிகள் மத்தியில் ஆற்றிவரும் துணிச்சலான சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்தில் நிதி உதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளது. 

2013ம் ஆண்டில் எபோலா நோய்த் தாக்கத் தொடங்கியதிலிருந்து இதுவரை 7,905 பேர் இறந்துள்ளனர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.