2015-01-08 17:06:00

இலங்கை செல்லும் கோவா திருப்பயணிகளுக்கு அரசு உதவி


சன.08,2015. முத்திப்பேறுபெற்ற ஜோசப் வாஸ் அவர்கள் புனிதராக அறிவிக்கப்படும் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு இலங்கை செல்லும் 500 கோவா கத்தோலிக்கர்களுக்கு பயணச் செலவுகளை ஏற்பதாக கோவா அரசு அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 14, வருகிற புதனன்று கொழும்புவில் முத்திப்பேறுபெற்ற ஜோசப் வாஸ் அவர்களைப் புனிதராக அறிவிக்கும் திருப்பலியில் கலந்துகொள்வதற்கு கோவாவிலிருந்து செல்லும் திருப்பயணிகளுக்கு கோவா மாநில அரசு உதவுவதற்குத் தீர்மானித்துள்ளது.

இப்புதனன்று கோவா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கைக்கு நான்கு நாள் திருப்பயணம் மேற்கொள்ளும் திருப்பயணிகளின் விமானக் கட்டணத்தில் பாதியை அரசு ஏற்கிறது.

மேலும், இத்திட்டத்தின்கீழ் ஒரு குடும்பத்திற்கு இருவரே, அதிலும் ஆண்டு வருமானம் மூன்று இலட்சத்துக்குக் குறைவாக உள்ளவர்களே அரசின் இச்சலுகையைப் பெறுவார்கள்.

1651ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி கோவாவில் பிறந்த ஜோசப் வாஸ் அவர்கள், 1686ம் ஆண்டில் இலங்கை சென்று கத்தோலிக்கத்தைப் பரப்பினார்.

கோவாவின் ஒரு கோடியே 50 இலட்சம் மக்களில் ஏறக்குறைய 26 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.

 ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.