2015-01-07 17:36:00

பூமியைப் போன்ற எட்டு கோளங்கள் கண்டுபிடிப்பு


சன.07,2015. பூமியைப் போன்ற தன்மைகள் கொண்ட எட்டு கோளங்களைத் அடையாளம் கண்டிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

நாசா நிறுவனத்தின் கெப்லெர் விண்வெளி தொலைநோக்கியைக் கொண்டு, இக்கோளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோளங்களில், பூமியைப் போலவே பாறைகள் அதிகமாக இருக்கக்கூடும் என்றும், நீர் நிரம்பிய கடல்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்குரிய பிற விடயங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்தக் கோளங்கள் பூமியைவிட இரண்டு மடங்குக்கும் மேல் குறைவான அளவுள்ளவை, அவை மிக அதிக வெப்பமோ அல்லது மிகக் குளிரான வெப்பநிலையோ இல்லாதவை என்று அறிவியலாளர்கள் கூறினர்.

ஆனால் இந்த கோளங்களில் ஏதாவது ஒன்றாவது வாழ்வதற்குரிய இடமாக இருக்குமா என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. இவை நம்பிக்கையளிக்கும் இடங்கள் என்று மட்டும் கூறினர்.

ஆனாலும், இந்த கோளங்களுக்கு மனிதர்களால் விரைவில் சென்றுவிட முடியாது. ஏனென்றால் அவை பல நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன.

ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் விண்வெளி இயற்பியல் மையத்தைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்கள் தங்களின் இந்த முடிவுகளை வாஷிங்டனில் நடந்த அமெரிக்க விண்ணியல் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் சமர்ப்பித்தனர்.

 ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.