2015-01-07 17:12:00

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை


சன.07,2015. கிறிஸ்து பிறப்புப் பெருவிழாக் காலத்தை முன்னிட்டு கடந்த இரு வாரங்களாக திருத்தந்தையின் புதன் பொதுமறைக்கல்வி உரை இடம்பெறவில்லை என்பது நாம் அறிந்ததே. இவ்வார புதன் பொது மறைக்கல்வி உரை, வழக்கத்திற்கு மாறாக, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்திலேயே இடம்பெற்றது, ஏனெனில், உரோம் நகரில் குளிர் அதிகரித்துக்கொண்டே வருவதால், தூய பேதுரு திறந்தவெளி அரங்கில் மறைக்கல்வி உரை இடம்பெறமுடியாத நிலை. தன் அண்மை புதன் மறைக்கல்வி உரைகளில், குடும்பம் குறித்து எடுத்துரைத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் தொடர்ச்சியாக, சமூகத்திலும் திருஅவையிலும் அன்னையரின் பங்கு குறித்து இன்று தியானிப்போம் என தன் மறைக்கல்வி உரையைத் துவக்கினார்.

இயேசுவை அன்னைமரி இவ்வுலகிற்கு வழங்கிய கிறிஸ்துப் பிறப்புக் காலத்தின் பின்னணியால் தூண்டப்பட்டவர்களாக, சமூகத்திலும் திருஅவையிலும் அன்னைய‌ரின் பங்கு குறித்து இன்று சிந்திப்போம். சமூகவாழ்வுக்கு அவர்களின் முக்கியப் பங்களிப்பு, அவர்களின் தினசரி தியாகங்கள், அவர்களின் ஏக்கங்கள் போன்றவைகளுக்காக நாம் அன்னையரை மகிமைப்படுத்துவதில், பலவேளைகளில், சரியான முறையில் அவைகளுக்கே உரிய பாராட்டுக்களை வழங்குவதில்லை. சுயநலத்தையே மையமாக வைத்தப் போக்குகள், திறந்த மனப்பான்மைகள், தாரளமனதும், அடுத்தவர் மீது அக்கறையும் இல்லா நிலைகள் போன்றவைகள் பரவி வரும் இக்காலத்தில், அவற்றிற்கு எதிராக நச்சுமுறிப்பான்களாகச் செயல்படவல்லவர்கள் அன்னையர். இவ்வகையில் பார்க்கும்போது, அன்னையர் என்பவர்கள், குழந்தைப் பெற்றெடுப்பதற்கென மட்டும் உரிய‌வர்கள் அல்ல. அதையும் தாண்டி, வாழ்விற்கான மதிப்புடனும், தியாக உணர்வுடனும், சுயமாக அவர்கள் தேர்வு செய்துகொண்டதே தாய்மை. ஓர் ஆரோக்கியமான சமூகத்திற்குத் தேவைப்படும் மனிதகுல, மற்றும், மத மதிப்பீடுகளை அடுத்தத் தலைமுறையினருக்கு வழங்கும் அர்ப்பணத்தைக் கொண்டவர்கள் அன்னையர். பேராயர் ஆஸ்கார் ரொமெரோவும் இதைப்பற்றிக் கூறும்போது, இதை 'அன்னையரின் மறைசாட்சிய மரணம்' எனக் குறிப்பிட்டு, மனித வாழ்வையும் பொதுநலத்தையும் அச்சுறுத்தும் அனைத்தையும் குறித்து கூர்மை உணர்வுடையவர்களாக அன்னையர் இருப்பதே சமூகம் மற்றும் திருஅவையின் செறிவூட்டலுக்கான ஆதாரம் என்கிறார். இவ்வுலகிலுள்ள அனைத்து அன்னையர்களுக்காக, அவர்களின்  சிறப்பு இருப்பிற்காக, சமூகத்திற்கும் திருஅவைக்கும் அவர்கள்  ஆற்றிவரும் பங்களிப்பிற்காக, என்னோடு இணைந்து நன்றிகூற உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த கிறிஸ்துப் பிறப்பு விழாக் காலத்தின் மகிழ்வில், உங்கள் அனைவர் மீதும்  அனைத்துக் குடும்பங்கள் மீதும், கடவுளின் மகனும் நம் அன்னையாம் மரியாவின் மகனுமான கிறிஸ்துவின் அருளும் அமைதியும் பொழியப்படுமாறு வேண்டுகிறேன் என உரைத்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.