2015-01-07 16:43:00

திராட்சைத்தோட்ட வேலையாள்கள் உவமை – பகுதி - 1


புத்தாண்டின் முதல் விவிலியத்தேடல் இது. கடந்த ஈராண்டுகள், இயேசுவின் உவமைகளில், குறிப்பாக, கதைவடிவில் அவர் கூறிய உவமைகளில், நம் தேடல் பயணத்தைத் தொடர்ந்துள்ளோம். லூக்கா நற்செய்தியிலிருந்து நாம் தெரிவு செய்த 13 கதைவடிவ உவமைகளைத் தொடர்ந்து, மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள, விதைப்பவர் உவமை, வயலில் தோன்றிய களைகள் உவமை, மன்னிக்க மறுத்த பணியாள் உவமை ஆகிய மூன்று கதைவடிவ உவமைகளில் இதுவரை நம் தேடல்களை மேற்கொண்டோம்.

2013ம் ஆண்டு, சனவரி மாதம், உவமைகளில் நாம் துவங்கியத் தேடல் பயணம், 91 வாரங்களைக் கடந்து, இன்று 92வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. எண்ணிக்கையைச் சொல்லி, பிரமிப்பில் ஆழ்ந்துபோவது நமது நோக்கமல்ல. 90க்கும் அதிகமான வாரங்களாய், விவிலியத்தேடல்கள் வழியே நம்மை இறைவன் வழிநடத்தியதை நன்றியோடு அறிக்கையிடுவதே நம் நோக்கம்.

புத்தாண்டின் முதல் விவிலியத் தேடலான இன்று, மத்தேயு நற்செய்தி 20ம் பிரிவில் கூறப்பட்டுள்ள "திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை"யில் (மத்தேயு 20:1-16) நம் தேடலை இன்று துவக்குகிறோம். இந்த உவமை, மத்தேயு நற்செய்தியில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. உழைப்பு, உழைப்பிற்கேற்ற நீதியான கூலி, நீதியைத் தாண்டி, உருவாகும் தாராள மனம் என்று பல கருத்துக்களை உள்ளடக்கியதுபோலத் தோன்றும் இந்த உவமை, நமக்குமுன் பல சவால்களையும் வைக்கிறது.

உவமைக்குள் புகுமுன், இந்த உவமை கூறப்பட்டச் சூழலை ஆய்வுசெய்வது நமது முதல் கடமை. விண்ணரசின் பல்வேறு பண்புகளை விளக்க, நற்செய்தியாளர் மத்தேயு கூறியுள்ள பல உவமைகளில் இதுவும் ஒன்று. "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்" என்ற வார்த்தைகளை, பல உவமைகளின் அறிமுக வார்த்தைகளாக நற்செய்தியாளர் மத்தேயு பயன்படுத்தியுள்ளார். (காண்க - மத்தேயு 13:24,47; 18:23; 20:1; 22:2; 25:1,14)

திராட்சைத் தோட்டத்தில் பணியாற்றச் செல்லும் வேலையாள்களையும், அவர்களுக்கு வழங்கப்படும் கூலியையும் மையப்படுத்தி இவ்வுவமை சொல்லப்பட்டுள்ளதால், இயேசு உழைப்பைப்பற்றியும் உழைப்பிற்கேற்ற நியாயமான கூலியைப்பற்றியும் பேசுவதாக பலர் இந்த  உவமைக்கு விளக்கம் அளித்துள்ளனர். கடினமான உடல் உழைப்பை வழங்கும் கூலித் தொழிலாளிகளுக்கு இன்று நிலவும் அநீதிகள், அன்று இஸ்ரயேல் சமுதாயத்திலும் நிலவிவந்ததால், தொழிலுக்கு வழங்கப்படவேண்டிய மதிப்பைப்பற்றிய ஒரு பாடமாக இந்த உவமையை இயேசு கூறினார் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆனால், இயேசு இவ்வுவமையின் ஆரம்பத்தில், "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்" என்று கூறுவதால், விண்ணரசின் பண்புகளை விளக்கும் மற்றுமொரு உவமையாக இதைக் கருதலாம். அந்த அரசில் யார் நுழைய முடியும், அல்லது முடியாது என்பதைத் தெளிவுபடுத்தும் ஒரு பாடமாகவும் இவ்வுவமையை நாம் எண்ணிப் பார்க்கலாம். இந்த எண்ணத்தை வலியுறுத்தும் வண்ணம், இவ்வுவமையின் இறுதி வரிகள் அமைந்துள்ளன: "இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்" என்று இயேசு கூறினார். (20:16)  

இவ்வுவமைக்கு முன்னதாக இடம்பெறும் 19ம் பிரிவின் இறுதி வரிகளும் இந்த வரிகளை ஒத்துள்ளன. 19ம் பிரிவின் இறுதியில், "முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்" என்று அவர்களிடம் கூறினார் (19: 30) என்ற வார்த்தைகளை வாசிக்கிறோம். முதன்மையானோர், கடைசியானோர் என்ற இரு சொற்களைக் கொண்டு, இயேசு வார்த்தை விளையாட்டு நடத்துவதைப் போலத் தோன்றலாம். ஆனால், யாருக்கு முதலிடம், யாருக்கு கடைசி இடம் என்று உலகம் வைத்திருக்கும் அளவுகோல்களுக்கு முற்றிலும் மாறுபட்டதோர் அளவுகோலை இயேசு கற்றுத்தந்தப் பாடங்களில் அடிக்கடி நாம் பார்க்கிறோம்.  

பொதுவாக, இயேசு கூறிய பல உவமைகள், உலகச் சிந்தனைகளை, அதுவும், இஸ்ரயேல் மக்கள் மத்தியில் நிலவிவந்த பல சிந்தனைகளை தலைகீழாகப் புரட்டிப் போடும் சக்தி பெற்றவை என்பதை அறிவோம். பாவிகள், தீண்டத்தகாதவர்கள் என்று, இஸ்ரயேல் மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சமாரியர்களில் ஒருவரை, 'நல்ல சமாரியர்' உவமையின் நாயகனாக இயேசு காட்டினார். பரிசேயரும், வரிதண்டுபவரும் கோவிலுக்கு செபிக்கச் சென்ற கதையில், புண்ணியங்களின் பிறப்பிடமென்று கருதப்பட்ட பரிசேயர் அல்ல, பாவி என்று ஒதுக்கப்பட்ட வரி தண்டுபவரே, இறைவனின் ஆசீர் பெற்று, வீடு திரும்பினார் என்று இயேசு கூறினார். இந்த உவமைகளைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் மனதில் நிச்சயம் நிலநடுக்கம் உருவாகியிருக்கும். இதைக் கேட்ட மதத் தலைவர்கள் மனதிலோ, பூகம்பங்கள் வெடித்திருக்கும்.

இறையரசைப் பற்றி இயேசு கூறிய உவமைகளில் ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் அடுக்கடுக்காய் வெளியாகியுள்ளன. எனவே, முதன்மையானோர், கடைசியானோர் என்ற இரு குழுவினரைப்பற்றி அவர் சொன்ன வார்த்தைகள், இயேசு வழக்கமாக வழங்கிவந்த அதிர்ச்சி மருத்துவத்தின் ஒரு பகுதியாக உள்ளன.

'திராட்சைத் தோட்ட வேலையாள்கள்’ உவமையைச் சொல்வதற்கு முன்னதாக, மத்தேயு நற்செய்தி, 19ம் பிரிவில், யார் யார் இறையரசில் நுழைய முடியும், அல்லது, முடியாது என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். சிறு பிள்ளைகளைப் பார்த்து, "விண்ணரசு இத்தகையோருக்கே உரியது" (19:14) என்று இயேசு ஆசி வழங்குவதைக் காண்கிறோம். நிறைவாழ்வடைய தான் செய்யவேண்டியதென்ன என்ற கேள்வியுடன் செல்வம் மிகுந்த இளையவர் ஒருவர், இயேசுவை அணுகிவந்தபோது, "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" (19:21) என்று இயேசு அழைப்பு விடுக்கிறார். இந்த அழைப்பை ஏற்கமுடியாமல், அந்த இளைஞர் மனமுடைந்து அகன்றதும், இயேசு "செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" (19:23-24) என்ற புகழ் பெற்ற வார்த்தைகளைச் சொல்கிறார். செல்வர்களுக்கு விண்ணகத்தில் ஆரவார வரவேற்பு இருக்கும் என்று இஸ்ரயேல் மக்கள் மத்தியில் நிலவிவந்த நம்பிக்கையை இயேசுவின் இந்த வார்த்தைகள் தலைகீழாக புரட்டிப்போட்டன.

இத்தகைய நம்பிக்கையில் ஊறிப்போயிருந்த சீடர்களுக்கு, இயேசு, செல்வரைப்பற்றி சொன்ன வார்த்தைகள் வியப்பைத் தந்தது. அவர்கள் அவரிடம் "அப்படியானால் யார்தாம் மீட்புப் பெறமுடியும்?" (19:25) என்றும், பேதுரு இன்னும் குறிப்பாக, "நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?" (19:27) என்றும் கேட்கின்றனர். அவர்கள் கொண்டிருந்த வியப்பையும், கலக்கத்தையும் தீர்க்கும் வகையில், இயேசு "என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்" (19:29) என்று கூறினார்.

செல்வர்கள் நுழைவதற்குக் கடினமாக இருக்கும் விண்ணரசில், செல்வங்களைத் துறந்து இயேசுவைப் பின்பற்றிய சீடர்களும் குழந்தைகளும், நுழைவது எளிது என்று இயேசு தெளிவுபடுத்தினார். இந்தத் தலைகீழ் மந்திரத்தின் உச்சகட்டமாக, "முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்" (19:30) என்று இயேசு கூறும் வார்த்தைகளோடு, மத்தேயு நற்செய்தியின் 19ம் பிரிவு முடிவடைகிறது. இந்தத் தலைகீழ் மந்திரத்தை தன் சீடர்கள் மனதில் இன்னும் ஆழமாகப் பதிக்கும் வண்ணம் இயேசு, "திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை"யை, தொடர்ந்து சொல்கிறார்.

ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை மன்னிப்பது, இறையரசில் இடம்பெறுவதற்கு ஒரு தகுதி என்பதை, ‘மன்னிக்க மறுத்த பணியாள் உவமை’ வழியாக வலியுறுத்திய இயேசு, தொடர்ந்து, விண்ணரசில் நுழைவதற்குத் தேவையான மற்றொரு உயர்ந்த பண்பை, 'திராட்சைத் தோட்ட வேலையாள்கள்' உவமை வழியேச் சொல்லித் தருகிறார். உயர்ந்த அப்பண்பை அடுத்த சில தேடல்கள் வழியே நாம் பயில முயல்வோம்.

இயேசு தான் கூறிய அனைத்து உவமைகளிலும், இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நிகழ்வுகளையே கூறிவந்துள்ளார் என்பதை அறிவோம். அதேபோல்தான் இந்த உவமையிலும், இஸ்ரயேல் மக்களுக்குப் பழக்கமான திராட்சைத் தோட்டம், அதில் வேலை செய்பவர்கள் என்று தன் கதையைப் புனைந்துள்ளார். திராட்சைத் தோட்டம், திராட்சைச் செடி, கொடி ஆகியவை, பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ள உருவகங்கள்.

இதோ, இரு எடுத்துக்காட்டுகள்:

இறைவாக்கினர் எசாயா 5:7

படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே: அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே.

இறைவாக்கினர் ஒசேயா 10:1

இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த திராட்சைக்கொடி, அது மிகுதியான கனிகளைத் தனக்கே தாங்கி நிற்கின்றது.

எனவே, திராட்சைத் தோட்டம் என்று இயேசு கதையை ஆரம்பித்ததும், அது இஸ்ரயேல் மக்களையும் உருவகித்துச் சொல்லப்படும் கதை என்பதை சீடர்கள் கட்டாயம் புரிந்திருப்பர்.

இந்த உவமையில் இரு பகுதிகள் இருப்பதை உணரலாம். திராட்சைத் தோட்ட உரிமையாளர், தன் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்களைத் தேடிச் செல்வது முதல் பகுதியாகவும், வேலைசெய்த தொழிலாளிகளுக்கு கூலி தருவது இரண்டாவது பகுதியாகவும் அமைந்துள்ளது. இவ்விரு பகுதிகளிலும் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் பல நமக்காகக் காத்திருக்கின்றன. நம் தேடலை அடுத்தவாரம், முதல் பகுதியில் தொடர்வோம்.








All the contents on this site are copyrighted ©.