2015-01-07 17:22:00

கிறிஸ்தவரின் துன்பங்களுக்கு முஸ்லிம் தீவிரவாதம் முக்கிய காரணம்


சன.07,2015. உலகில் கடந்த ஆண்டில், கிறிஸ்தவர்களை நசுக்கியவர்களில் முக்கியமானவர்களாக, முஸ்லிம் தீவிரவாதிகள் இருந்தனர் என்றும், மத்திய கிழக்குப் பகுதியில் மட்டுமின்றி, ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளால் துன்புற்றனர் என்றும், உலகில் மத சுதந்திரம் குறித்து ஆய்வு நடத்திய ஓர் அமைப்பு இப்புதனன்று கூறியது.

உலக அளவில் நசுக்கப்படும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் Open Doors    என்ற பன்னாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் இவ்வாறு தெரிய வந்துள்ளது.

கிறிஸ்தவர்கள் தங்களின் மதக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதற்கு அதிகமாக பிரச்சனைகளை எதிர்கொள்ளும் முக்கிய இருபது நாடுளில், பதினெட்டு நாடுகளில்  இஸ்லாமியத் தீவிரவாதம் அதற்கு முக்கிய காரணமாக உள்ளது என அவ்வறிக்கை கூறுகிறது.

ஐஎஸ் இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகள் நடத்தும் அடக்குமுறையால், மத்திய கிழக்கிலிருந்து வெளியேறும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் அதிகரித்திருந்தது என, இவ்வமைப்பு கூறுகிறது.

நைஜீரியாவில் 2,484 கிறிஸ்தவர்களும், மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் 1,088  கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறும் Open Doors அமைப்பு, கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில்கூட பாகுபாடு, ஒதுக்கப்படல் மற்றும் வன்முறையை கிறிஸ்தவர்கள் எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கிறது.

அச்சுறுத்தலுக்குள்ளாகும் கிறிஸ்தவர்கள் என்று பார்க்கையில், பன்னிரண்டில் எட்டு பேர் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்கள்தான் என்றும், கிறிஸ்தவர்கள் அதிகப் பிரச்சனைகளைச் சந்திக்கக்கூடிய நாடு என்றால், அது தொடர்ந்து, வடகொரியாதான் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

 ஆதாரம் : Reuters








All the contents on this site are copyrighted ©.