2015-01-07 17:42:00

1968ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது (René Cassin)


சன.07,2015. அன்பு நேயர்களே, 2014ம் ஆண்டு சனவரி 8ம் தேதி புதன்கிழமை இரவும், 9ம் தேதி வியாழன் காலையும் அமைதி ஆர்வலர்கள் என்ற புதிய தொடரைத் தொடங்கினோம். நொபெல் அமைதி விருது வழங்கப்பட்ட 1901ம் ஆண்டிலிருந்து 1965ம் ஆண்டுவரை இவ்விருதைப் பெற்ற ஆர்வலர்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றி 2014ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதிவரை இத்தொடரில் கேட்டோம். 2013ம் ஆண்டுவரை இவ்விருதைப் பெற்ற ஆர்வலர்கள் இன்னும் இருப்பதால் இந்நிகழ்ச்சியை இந்த 2015ம் ஆண்டிலும் தொடருவதற்குத் தீர்மானித்தோம். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் குழந்தை நல நிதியமான யூனிசெப், 1965ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்றது. பின்னர், 1966, 1967ம் ஆண்டுகளில் இவ்விருது எவருக்கும் வழங்கப்படவில்லை. எனவே அவ்வாண்டுகளின் விருதுநிதியின் மூன்றில் ஒரு பங்கு, அதன் மூலநிதியிலும், மூன்றில் இரண்டு பங்கு அதன் சிறப்பு நிதியிலும் வைக்கப்பட்டன. பின்னர் 1968ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பிரான்ஸ் நாட்டு René Samuel Cassin என்பவருக்கு வழங்கப்பட்டது.

 

René Samuel Cassin அவர்கள், 1887ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி பிரான்சின் Bayonne ல் பிறந்தார். யூதரான இவரின் தந்தை ஒரு வணிகர். René Cassin அவர்கள், ஒரு சட்ட நிபுணர், சட்டக்கல்வி பேராசிரியர், நீதிபதி, மனிதாபிமானி மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் அனைத்துலக அளவில் புகழ்பெற்றவர். மனிதரின் உரிமைகள், சட்டமுறைப்படியும், அறநெறிப்படியும் உலகில் ஏற்கப்படுவதற்கு தீவிரமாய் உழைத்தவர்களில் இவரும் ஒருவர். 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை அங்கீகரித்த, உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கையைத் தொகுத்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. இவரின் இந்தப் பணியைப் பாராட்டி, 1968ம் ஆண்டில் இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது. எதிலும் மிதவாதியாகச் செயல்பட்ட René Cassin அவர்கள், தனது 81வது வயதில் இவ்விருதைப் பெற்றபோது கூறினார் - "மனிதர்கள் எப்போதும் நல்லவர்களாக இருப்பதில்லை" என்று.

 

René Cassin அவர்கள், முதல் உலகப் போரில் படைவீரராகப் பணியாற்றிய பின்னர் அமைதியை விரும்பும் ஆர்வலர்களைக் கொண்டு ஒரு கூட்டுக்கழகத்தையும் தொடங்கினார். இவர் நொபெல் அமைதி விருது பெற்ற அதே ஆண்டில், ஐ.நா.வின் மனித உரிமைகள் விருது ஒன்றையும் பெற்றார். IFSA என்ற ப்ரெஞ்ச் நிர்வாக அறிவியல் நிறுவனத்தையும் இவர் உருவாக்கினார். நிர்வாகச் சட்டத்தில் ப்ரெஞ்ச் கோட்பாடுகளை வளர்க்கும் நோக்கத்தில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இது பொதுநலன் கழகமாக பின்னாளில் அங்கீகரிக்கப்பட்டது. இவர், 1924ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் ப்ரெஞ்ச் பிரதிநிதியாகப் பணியாற்றினார். அச்சமயத்தில் உலகில் ஆயதக்களைவுக்காக அதிகம் உழைத்தார். ஐ.நா. மனித உரிமைகள் அவையிலும், Hague பன்னாட்டு நீதிமன்றத்திலும் பணியாற்றினார். ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் உறுப்பினராக 1959ம் ஆண்டு முதல் 1965ம் ஆண்டு வரையிலும், அதன் தலைவராக 1965ம் ஆண்டு முதல் 1968ம் ஆண்டு வரையிலும் பணியாற்றினார். தற்போது அந்த நீதிமன்றக் கட்டிடம், Strasbourgல் René Cassin சாலையில் அமைந்துள்ளது. René Cassin அவர்கள், பல அரசு-சாரா நிறுவனங்களுக்கும் தலைவராக இருந்துள்ளார். போரில் உடல் உறுப்புக்களை இழந்த ப்ரெஞ்ச் மாற்றுத்திறனாளிகள் கழகத்தையும் 1918ம் ஆண்டில் தொடங்கினார். அதன் கவுரவத் தலைவராக, 1940ம் ஆண்டுவரை பணியில் இருந்தார்.

 

1945ம் ஆண்டில் de Gaulle அவர்கள், Cassin அவர்களிடம், நீங்கள் ப்ரெஞ்ச் மக்களுக்கு ஏராளமான நற்காரியங்களைச் செய்துள்ளீர்கள், யூத மக்களுக்கும் செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். அந்த வேண்டுகோளை ஏற்று, இஸ்ரேல் உலகளாவிய கூட்டமைப்பு, அமெரிக்க யூதக் கழகம், ஆங்கில-யூதக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து யூத நிறுவனங்களின் ஆலோசனை அவையைத் தோற்றுவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் யூதக் கண்ணோட்டம் இடம்பெறவும், யூதர்கள் குடியுரிமை பெறவும் உழைத்தார். எருசலேமில் ஓர் உயர்நிலைப்பள்ளி இவரின் பெயரால் இயங்குகிறது. பிரான்சின் Basque அரசு, 2003ம் ஆண்டில் René Cassin விருது ஒன்றை உருவாக்கியது. மனித உரிமைகளுக்காக, தனியாக அல்லது குழுவாகச் சேர்ந்து உழைப்பதற்குத்  தங்களை அர்ப்பணிப்பவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் இவ்விருதை Basque அரசு உருவாக்கியது. அனைத்துலக மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் தேதி இவ்விருது வழங்கப்படுகிறது.

 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பது போன்று, "மனிதர் அமைதி பற்றி அதிகம் பேசுகின்றனர், ஆனால் அவர்கள் அடிக்கடி போரையே தேர்ந்தெடுக்கின்றனர் அல்லது அதற்கு உடந்தையாக அமைதியாக இருந்து விடுகின்றனர். ஒவ்வொரு மனிதரும் அமைதிக்காகப் பசியும், தாகமும் கொண்டிருக்கின்றனர். அமைதி என்பது போர் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல, மனிதர் தன்னோடும், இயற்கையோடும் பிறரோடும் நல்லிணக்கத்தில் வாழ்வதாகும். அமைதி இன்றி எதிர்காலம் கிடையாது. அமைதியைக் கட்டியெழுப்புவது இக்காலத்திற்கு உடனடியாக தேவைப்படுகிறது. எனவே இந்தப் புதிய ஆண்டில் நமது சக்திக்கு ஏற்ப அமைதிக்காக ஏதாவது ஒரு சிறு செயலைச் செய்வோம். 

 ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.