2015-01-06 15:35:00

கிறிஸ்துவைச் சந்திப்பதற்கு கீழ்த்திசை ஞானிகளைப் பின்பற்றுவோம்


சன.06,2015. இவ்வுலகின் வல்லமையில் கடவுள் தம்மை வெளிப்படுத்தமாட்டார், மாறாக, தமது அன்பின் தாழ்மையில் அவர் நம்மிடம் பேசுகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இச்செவ்வாயன்று நிறைவேற்றிய திருக்காட்சிப் பெருவிழா திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, கீழ்த்திசை ஞானிகள், மேலோட்டமாக ஒளிரும் வல்லமையில் நம்பிக்கை வைப்பதைவிட கடவுளின் நன்மைத்தனத்தில் நம்பிக்கை வைத்திருந்ததால் அவர்கள்   உண்மையான விசுவாசத்துக்கு மனம் மாறுவதன் எடுத்துக்காட்டுகளாய் உள்ளார்கள் என்றும் கூறினார்.

பெத்லகேமில் கன்னி மரியிடம் பிறந்த அந்தக் குழந்தை, இஸ்ரயேல் மக்களுக்காக மட்டுமல்லாமல் மானிட சமுதாயம் அனைத்துக்காகவும் இவ்வுலகுக்கு வந்தது என்பதை கீழ்த்திசை ஞானிகள் குறித்து நிற்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த ஞானிகளை வழிகாட்டிய விண்மீனால் புதிய மனிதர்கள் எப்போதும் தெளிவு பெறுகின்றார்கள் என்றும் கூறினார்.

உலகின் மதங்களிலும் மெய்யியல் கோட்பாடுகளிலும் தணியாத தாகத்துடன் கடவுளைத் தேடும் மனிதர்களை இந்தக் கீழ்த்திசை ஞானிகள் குறித்து நிற்கின்றனர் என்றும் மறையுரையில் கூறிய திருத்தந்தை, கடவுளை எங்கே காண முடியும் என்று நாமும் நம்மையே கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

போர்கள், சிறார் பயன்படுத்தப்படுதல், சித்ரவதை, ஆயுத வர்த்தகம், மனித வர்த்தகம் போன்றவை நம்மைச் சுற்றிலும் இருப்பதை நாம் பார்க்கிறோம், இந்த எதார்த்தங்களில் நம் நலிந்த சகோதர சகோதரிகள் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவிக்கின்றனர், இச்சூழல்களில் இயேசு இருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இவ்வுலகின் சிந்தனையால் வழிநடத்தப்பட்ட பாதையினின்று வேறுபட்ட பாதையை குடில் நமக்குக் காட்டுகின்றது, இப்பாதை, பெத்லகேம் குடிலில், கல்வாரியில் சிலுவையில், துன்புறும் நம் ஒவ்வொரு சகோதர சகோதரிகளில் கடவுள் தம்மையே தாழ்த்திய பாதை என்றும் விளக்கினார் திருத்தந்தை.

கீழ்த்திசை ஞானிகள் மனிதக் கணக்கீடுகளை மேற்கொண்டு கடவுளின் பேருண்மையில் நுழைந்தனர், இந்த மனமாற்றத்தை நாமும் ஆண்டவரிடம் கேட்போம் என்று இச்செவ்வாய் திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மூன்று கீழ்த்திசை ஞானிகள் பெத்லகேம் குடிலில் குழந்தை இயேசுவைத் தரிசித்து தங்களின் காணிக்கைகளை அர்ப்பணித்த திருக்காட்சிப் பெருவிழா இத்தாலியில் சனவரி 6ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.