2015-01-06 15:51:00

இறைவார்த்தையை தினமும் வாசித்து தியானிக்க மறக்கவேண்டாம்


சன.06,2015. திருக்காட்சிப் பெருவிழாவான இச்செவ்வாயன்று நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு மூவேளை செப உரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருக்காட்சிப் பெருவிழா பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இயேசு தம் அன்பை சலுகைபெற்ற சிலருக்காக மட்டும் ஒதுக்கி வைப்பதில்லை, ஆனால் அனைவருக்கும் தம் அன்பைப் பொழிகிறார் என்பதை இப்பெருவிழா நமக்கு உணர்த்துகின்றது என்று கூறினார்.

இறைவனைத் தேடுதலில் சந்தித்த இன்னல்கள் மத்தியில் இந்த ஞானிகள் சோர்வின்றி    செயல்பட்டனர் என்றும், இவர்களின் அனுபவம் ஒவ்வொரு மனிதரையும் இறைவன் பக்கம் இழுக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

ஒவ்வொரு மனிதரையும் இயேசுவிடம் வழிநடத்தும் விண்மீன் இறைவார்த்தை என்றும், இந்த இறைவார்த்தை நம் இதயங்களையும் நம் சமூகங்களையும் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதனால், ஒவ்வொரு நாளும் இறைவார்த்தையை வாசித்து தியானிக்க மறக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இதன்மூலம் நாம் நம் இதயங்களில் சுடரைத் தாங்கிச் செல்வோம் என்றும் கூறினார்.

மேலும், சனவரி 6ம் தேதி கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்கும் கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கர்களுக்கும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட உலக பாலர் சபை தினத்திற்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து, சிறார் மத்தியில் உழைக்கும் அனைவரையும் ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.