2015-01-05 15:56:00

நம் மௌனத்தால் அமைதிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைக்கிறோம்


சன.05,2015. சுரண்டல் எனும் சமூகத்தீமை, மனிதர்களுக்கிடையே உறவுகளைத் தாழ்மைப்படுத்துவதுடன் ஒன்றிப்பு வாழ்வையும் தடை செய்கின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

அடிமைகள் என்பது இனி இல்லை, அனைவரும் உடன்பிறப்புக்களே என்ற இவ்வாண்டின் உலக கத்தோலிக்க அமைதி தினச் செய்தியின் கருப்பொருளை மையமாக வைத்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதர்கள் எப்போதும் ஒளியைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாலும் இருள்தரும் ஏமாற்று அமைதியையே விரும்புகின்றனர் என உரைத்தார்.

சிறு சிறு நற்செயல்கள் நம்பிக்கையின் விதைகளாக இருந்து உதவ முடியும் என்றுரைத்த திருத்தந்தை, அமைதியை ஏற்படுத்தும் பாதை இல்லையெனில் அங்கு வருங்காலத்திற்கு வாய்ப்பில்லை என்றும் கூறினார்.

அமைதி பற்றி பேசிக்கொண்டிருக்கும் நாம் பலவேளைகளில் போரைத் தேர்ந்தெடுக்கின்றோம் என்ற கவலையை வெளியிட்ட திருத்தந்தை, நாம் நம் மௌனம் மூலம் அமைதிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைக்கிறோம் அல்லது அமைதியைக் கட்டி எழுப்புவதற்கு எதுவும் ஆற்றாமல் மௌனமாக இருக்கிறோம் எனவும் கூறினார்.

தீமையை ஆற்றுபவர்கள் ஒளியை வெறுக்கிறார்கள், ஏனெனில் அவர்களின் தீய செயல்களை ஒளி வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும் என்ற பயத்தாலே அவ்வாறு செய்கிறார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.