2015-01-01 14:51:08

ஜன.02,2015. கடுகு சிறுத்தாலும்...... அமிர்தமும் அளவோடுதான்!


ஓர் ஊரில் உரையாற்ற அறிஞர் ஒருவர் வந்தார். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்கள் கலைந்துச் சென்று விட்டார்கள். பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அறிஞருக்கு ஏமாற்றம். மிஞ்சி இருந்ததோ, அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும்தான். என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார்.
அவன் சொன்னான், ”ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும். நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும்போது, எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க, ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும், நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்.” என்று. இது பெரியப் படிப்பினையாக தெரிந்தது அவருக்கு.
அந்தக் குதிரைக்காரனைப் பாராட்டி விட்டு, அவனுக்கு மட்டும் தன் உரையை ஆரம்பித்தார். தத்துவம், இலக்கியம், வாழ்வியல் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப்படுத்திவிட்டார். உரை முடிந்ததும், எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.
“ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரைதான் இருந்தது என்றால், அதற்கு மட்டும்தான் புல் வைப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிவிட்டு வரமாட்டேன்,” என்றான் அவன். அவ்வளவு தான்! அறிஞர் அதிர்ந்து விட்டார்.
அமிர்தத்திற்கும் அளவென்ற ஒன்று உண்டு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.