2015-01-01 10:15:29

கடுகு சிறுத்தாலும்... அறிமுகம்


ஒவ்வோர் ஆண்டும் நமது நிகழ்ச்சிகளில், முதல் சில நிமிடங்கள் வேறுபட்ட சிந்தனைகளைப் பகிர்ந்து வந்துள்ளோம்.
தற்போது நிறைவுற்ற 2014ம் ஆண்டு, புனிதரும் மனிதரே;
அதற்கு முன்னர், கற்றனைத்தூறும்;
அதற்கு முன்னதாக கவிதைக் கனவுகள், நாளுமொரு நல்லெண்ணம் என்று...
நாம் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, பல்வேறு எண்ணக் குவியல்களைத் திரட்டி வந்துள்ளோம்.
புலரும் 2015ம் ஆண்டு, புதியதொரு முயற்சியை நாங்கள் துவக்குகிறோம். இந்த முயற்சிக்கு நாங்கள் சூட்டியிருக்கும் பெயர்... "கடுகு சிறுத்தாலும்". இதற்கு பெரிய விளக்கங்கள் தந்தால், அது அந்தப் பழமொழியின் காரத்தைக் குறைத்துவிடும்.
மேலும், விதைக்கப்படும் கடுகு விதை, பல பறவைகளுக்குத் தஞ்சம் தரும் மரமாக வளரும் சக்தி பெற்றது என்று இயேசு தன் உவமை ஒன்றில் (மத்தேயு நற்செய்தி 13: 31-32) சொன்னதும் நமக்கு நினைவுக்கு வருகிறது.
எனவே, அன்புள்ளங்களே, கடுகு மணிகளைப் போல, சிறு, சிறு சிந்தனைகளை, காரம் குறையாமல் விதைத்து, அது பெரிய மரமாக வளர்வதைக் காண்பதே, "கடுகு சிறுத்தாலும்" நிகழ்ச்சியின் நோக்கம்.
இதோ, முதல் கடுகு மணி...

நகையுணர்வு, தனிவரமே

கவிஞர் வாலி ஒருமுறை ஓர் அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அந்த அறிஞர் கேட்டார், ''வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?'' என்று. வாலி சொன்னார், ''ராமாயணத்திலே, வாலி யாரோடு சேர்கிறானோ, அவருடைய பலத்தில் பாதி, அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது, அவர்களது அறிவில் பாதி எனக்கு வந்து விடுமல்லவா? அதனால்தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன் '' என்று. அறிஞர் உடனே கிண்டலாக, ''அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?'' என்று சொன்னார். கவிஞர் வாலி சிரித்துக்கொண்டே, ''நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!'' என்றாராம்.
அறிவு மட்டுமல்ல, தைரியமும் நகைச்சுவை உணர்வும், அறிஞர்களுக்கு தனிவரம்தான்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.