2015-01-01 15:02:39

Te Deum திருவழிபாட்டுச் சடங்கில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரையின் சுருக்கம்


ஜன.01,2015. ஆண்டின் இறுதி என்பது நம் வாழ்க்கைப் பயணத்தைக் குறித்து எண்ணிப் பார்ப்பதற்கு ஏற்ற நேரம்.
நம் வாழ்விற்கு துவக்கமும் உண்டு, முடிவும் உண்டு. இறைவனிடமிருந்து பெற்ற நன்மைகளுக்கு நன்றி கூறவும், நம் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கவும் ஏற்ற நேரமிது. என்ற கருத்தை மையமாக வைத்து Te Deum உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் குழந்தைகளாக வாழ்ந்தோமா அல்லது அடிமைகளாக வாழ்ந்தோமா என்பது குறித்து சிந்திக்கும் நேரமிது.
கிறிஸ்துவில் திருமுழுக்கு பெற்று, தூய ஆவியால் அருள்பொழிவு செய்யப்பட்டு, மீட்கப்பட்டு விடுதலையானவர்களாக உள்ளோமா? அல்லது, உலகப்போக்குகளின் நேர்மையற்ற வாதங்களால் கவரப்பட்டு, சுயநலங்களுக்குள் நம்மை இழந்து, சாத்தானின் அடிமைகளாக உள்ளோமா?
இன்றைய சுரண்டல் நிலைகள் நம் மனச்சான்றிற்கும், ஆன்மீக மற்றும் நன்னெறி வழியான புதுப்பித்தலுக்கும் அழைப்பு விடுக்கின்றன.
நீதியான, இணக்கமான வாழ்வுடன் கூடிய நகரைக் கட்டியெழுப்புவோம். அங்கு ஏழைகள் மைய இடத்தை வகிக்கட்டும். ஏழைகளை பாதுகாப்போம், நம்மையல்ல. வலிமையற்றோருக்கு பணிபுரிவோம், அவர்களைச் சுயநலத்திற்கு பயன்படுத்தாதிருப்போம்.
இறைவன் நம்மை விடுதலையின் குழந்தைகளாகப் படைத்தார். நாமோ, தீயோனின் அடிமைகளாக மாறினோம். அவரோ, மனிதனாக உடல் எடுத்து நம்மை மீட்டார். நாம் இன்று எப்படி வாழ்கிறோம்? குழந்தைகளாகவா? அல்லது, அடிமைகளாகவா?
நாம் விடுதலையைக் கண்டு அஞ்சி, பலவேளைகளில் நம்மையறியாமலேயே அடிமைத்தனத்தைத் தேர்ந்துகொள்கிறோம். ஏனெனில், விடுதலை என்பது நம் பொறுப்புணர்வுகளைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், அடிமைத்தனமோ, காலத்தை தற்காலிக ஒன்றாக மாற்றி, கடந்த காலத்தையும் வருங்காலத்தையும் அதிலிருந்து தொடர்பற்றதாக மாற்றிவிடுகிறது. நம்மால் கனவு காணவோ, பறக்கவோ, நம்பிக்கைக் கொள்ளவோ இயலாது என்று நம்மை நம்ப வைக்கிறது அடிமைத்தனம்.
எகிப்திலிருந்து விடுதலைப்பெற்ற இஸ்ரயேலர்களும், தங்கள் பாலைவனப் பயணத்தின்போது, எகிப்தின் அடிமைவாழ்வு மேன்மை நிறைந்ததாக இருந்ததாக தவறாகக் கனவு கண்டனர்.
அடிமைத்தனம், அதிகச் சுதந்திரத்தைத் தருவது போன்ற ஒரு மாயையை உருவாக்குகின்றது. இது வாணவேடிக்கைபோல, அந்த நேரத்திற்கு மட்டுமே அழகான ஒரு தோற்றத்தைத் தரும்.
ஆனால் கிறிஸ்தவர்களாகிய நமக்கு, நம் பணி, வாழ்வு, இருப்பு, பொதுநலப்பணி, சமூகத்திலும் திருஅவையிலும் நம் பங்களிப்பு என அனைத்தும், நம்மையே நாம் ஆன்ம சோதனைச் செய்வதில் அடங்கியுள்ளது.
நாம் பெற்ற நன்மைகளுக்கு நன்றியும், இழைத்தத் தவறுகளுக்கு மன்னிப்பும் கேட்கும் இந்நேரத்தில், விடுதலையில் நடைபோடுவதற்கான அருளையும் வேண்டுவோம். இதில் நம் அன்னையாம் மரியாவின் பரித்துரையை நாடுவோம்.
இவ்வாறு, இவ்வாண்டின் Te Deum செப வழிபாட்டில் உரை வழங்கியபின், தூய பேதுரு வளாகத்தின் கிறிஸ்துமஸ் குடில் நோக்கிச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு சிறிது நேரம் செபித்தபின், அங்கு குழுமியிருந்த மக்களுக்கு வாழ்த்துக்களை வழங்கி, 2014ம் ஆண்டை நிறைவுச் செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.