2014-12-30 14:37:13

புனிதரும் மனிதரே ஆண்டின் இறுதிநாள் ஆண்டவனில் தஞ்சம்


மலைப்பகுதியில் இருந்த ஒரு கிராமத்தில் பணியாற்ற சென்றுகொண்டிருந்தார் ஓர் இளம் அருள்பணியாளர். போகும் வழியில், கீழே விழுந்ததால் அவரது கால் எலும்பு முறிந்தது. எனினும், தன்னோடு வந்திருந்த மற்றொரு சகோதரரின் உதவியோடு அவர் கிராமத்தைச் சென்றடைந்தார். அங்கு, நாள் முழுவதும், பல மணி நேரங்கள் ஒப்புரவு அருள்சாதனம் வழங்கினார். அவருடன் வந்திருந்த சகோதரர், மாலையில், மருத்துவர் ஒருவரை அழைத்து வந்தார். அருள்பணியாளரின் காலை மருத்துவர் சோதித்தபோது, முறிந்திருந்த கால் எலும்பு, முற்றிலும் குணமடைந்திருந்தது.
இவ்வகையில், அற்புத குணம் பெற்ற அருள்பணியாளர், இயேசு சபை புனிதரான ஜான் பிரான்சிஸ் ரீஜிஸ் (St John Francis Regis). பிரான்ஸ் நாட்டில் செல்வம் மிகுந்த ஒரு வணிகரின் மகனாக, 1597ம் ஆண்டு பிறந்த ஜான், தன் 18வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். 1631ம் ஆண்டு, தன் 34வது வயதில் அருள் பணியாளராக தன் பணிகளைத் துவக்கினார்.
9 ஆண்டுகள் இவர் ஆற்றிய பணியால், திருஅவையை விட்டு விலகிச் சென்றிருந்த பலர், மீண்டும் திருஅவையில் இணைந்தனர். தவறான வழியில் சென்ற பல இளம் பெண்களை மீண்டும் நல்வழிக்குக் கொணர்ந்த ஜான் பிரான்சிஸ் அவர்கள், அப்பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்வகையில் மகளிர் இல்லங்களை உருவாக்கினார். இப்பெண்களைத் தவறாகப் பயன்படுத்தி, பணம் சம்பாதித்தவர்கள், அருள்பணியாளர் ஜான் பிரான்சிஸ் மீது ஆத்திரம் கொண்டு, பலமுறை அவரைத் தாக்கினர்.
கிராமத்துப் பெண்கள், பிழைப்புத் தேடி நகரங்களுக்குச் சென்று, பின்னர் அங்கு தங்கள் வாழ்வைச் சீரழித்து வந்ததைக் கண்ட அருள்பணியாளர் ஜான் பிரான்சிஸ் அவர்கள், அப்பெண்கள் தங்கள் கிராமங்களிலேயே தங்கி தொழில் புரிவதற்கு அவர்களுக்கு தையல் நிலையங்களை அமைத்துக் கொடுத்தார்.
பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு வழங்க, இவர் தானியக் கிடங்கு ஒன்றை நிறுவினார். பல நாட்கள் இந்தத் தானியக் கிடங்குகளில் தேவையான அளவு தானியம் தானாகவே நிறைந்ததென்று சொல்லப்படுகிறது.
1640ம் ஆண்டு, அருள்பணியாளர் ஜான் பிரான்சிஸ் அவர்கள் ஓர் ஊரில், ஒப்புரவு அருள்சாதனம் வழங்கும் இடத்திலேயே நாள் முழுவதும் அமர்ந்திருந்தார். மாலையில் அவரிடம் அருள்சாதனம் பெறவந்த ஒருவர், அருள் பணியாளர் மயங்கிய நிலையில் அங்கு அமர்ந்திருப்பதைக் கண்டு, மற்றவர்களுக்குச் சொல்ல, உடனே உதவிகள் விரைந்தன. உடல் நலம் மிகவும் குறைந்த நிலையில் இருந்த ஜான் பிரான்சிஸ் அவர்களுக்கு நோயில் பூசுதல் வழங்கப்பட்டது. 1640ம் ஆண்டின் இறுதிநாளான டிசம்பர் 31ம் தேதி, தன் 43வது வயதில், புனித ஜான் பிரான்சிஸ் ரீஜிஸ் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.