2014-12-30 15:59:30

சிரியாவில் ஐஎஸ் அமைப்பால் அரையாண்டுக்குள் 2,000 கொலைகள்


டிச.30,2014. ஐஎஸ் இஸ்லாமிய நாட்டின் தீவிரவாதக் குழு சிரியாவில் கடந்த 6 மாதத்தில் ஏறக்குறைய 2,000 பேரைச் சுட்டுக் கொலை செய்துள்ளது, இவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர், ஐஎஸ் இஸ்லாமிய நாட்டின் ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் என்று பிரிட்டனை மையமாகக் கொண்ட சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
இவ்வாறு இறந்தவர்களில் 4 சிறார், 8 பெண்கள் உட்பட 1,175 பேர் அப்பாவி பொது மக்கள் என்றும், இதில் பலியானவர்கள் அனைவரும் சுட்டு அல்லது தலை வெட்டப்பட்டு அல்லது கல்லால் எறிந்து கொல்லப்பட்டவர்கள் என்றும் அம்மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.
மேலும், தங்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கு விரும்பிய ஐஎஸ் தீவிரவாதக் குழுவின் 120 பேரையும் இக்குழு தூக்கிலிட்டுள்ளது என்றும் அவ்வமைப்பு கூறியுள்ளது.
502 சிரியாப் படைவீரர்கள் மற்றும் சிரியா அரசுக்கு ஆதரவானவர்களையும், ஐஎஸ் இஸ்லாமிய நாட்டுக்கு எதிரான நுர்சா அமைப்பின் 80 உறுப்பினர்களையும் இத்தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். இஸ்லாமிய சட்டப்படி அரசு அமைக்கும் நோக்கத்துடன் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு சிரியாவில் அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வருகிறது. ஈராக் மற்றும் சிரியாவில் பெரும்பகுதியை இந்த அமைப்பு கைப்பற்றியுள்ளது. தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் "caliphate" சட்டத்தை கடந்த ஜூன் 28ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது இந்த ஐஎஸ் தீவிரவாதக் குழு.

ஆதாரம் : Agencies







All the contents on this site are copyrighted ©.