2014-12-30 15:58:24

இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து திருத்தந்தையை வரவேற்குமாறு கர்தினால் இரஞ்சித் அழைப்பு


டிச.30,2014. இலங்கையில் வருகிற சனவரியில் நடைபெறவுள்ள தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் அத்தேர்தல் முடிவுகளைப் பாராமல், அனைத்துக் குடிமக்களும் அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டுத் தலத்திருஅவைத் தலைவர்.
இலங்கையில், தேர்தலுக்கு முன்னும் பின்னும் வன்முறை இடம்பெறும் என்ற அச்சம் பரவலாக நிலவிவரும்வேளை, வருகிற சனவரி 13 முதல் 15 வரை அந்நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை அனைவரும் ஒன்றிணைந்து வரவேற்குமாறு வலியுறுத்தியுள்ளார் கர்தினால் மால்கம் இரஞ்சித்.
அரசுத்தலைவர் தேர்தல், வன்முறையின்றி நியாயமாக நடைபெறும் என்பதிலும், அரசியல் தலைவர்கள் மற்றும் குடிமக்களின் நன்மைத்தனத்திலும் தனக்கு நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளார் கர்தினால் இரஞ்சித்.
மேலும், இலங்கையில் வருகிற 8ம் தேதி நடைபெறவுள்ள அரசுத்தலைவர் தேர்தல், அமைதியாகவும், நம்பகமான முறையிலும் இடம்பெறுவதற்கு அரசு உறுதியளிக்குமாறு கேட்டுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களுடன் கடந்த வாரத்தில் தொலைபேசியில் பேசிய பான் கி மூன் அவர்கள், ஒப்புரவு, அரசியல் உரையாடல், கடமையுடன் செயலாற்றல் ஆகிய நடவடிக்கைகளுக்கு, ஐ.நா. நிறுவனம் தொடர்ந்து தனது ஆதரவை வழங்குகின்றது என்றும் கூறினார்.

ஆதாரம் : Fides/UN







All the contents on this site are copyrighted ©.