2014-12-30 15:58:57

ஆர்மேனிய இனப்படுகொலை இடம்பெற்றதன் நூறாம் ஆண்டு


டிச.30,2014. நூறாண்டுகளுக்கு முன்னர், ஆர்மேனிய மக்களுக்கு ஓர் எதிர்காலம் இருக்குமா என்று நம்புவதற்குக் கடினமாக இருந்தது, ஆயினும் அம்மக்களுக்கு புதிய விடியல் வந்திருக்கிறது, இறைவனின் அருளால் ஆர்மேனிய மக்கள் மரணத்திலிருந்து உயிர் பெற்றுள்ளார்கள் என்று ஆர்மேனிய முதுபெரும் தந்தை 2ம் Karekin கூறியுள்ளார்.
துருக்கி ஒட்டமான் பேரரசு, 1915ம் ஆண்டிலும், அதைத் தொடர்ந்த காலங்களிலும், ஆர்மேனியாவிலும், துருக்கியிலும் வாழ்ந்த ஆர்மேனியச் சமூகங்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தியதன் நூறாம் ஆண்டை முன்னிட்டு அனைத்து ஆர்மேனியர்களுக்கும் சுற்றுமடல் வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை 2ம் Karekin அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
அப்பாவி ஆர்மேனிய மறைசாட்சிகள் மற்றும் நம் மக்களின் துன்பங்கள், இந்த நூறாம் ஆண்டு நிறைவில், நீதி மற்றும் உண்மைக்கு அழைப்பு விடுக்கின்றன என்று கூறியுள்ள முதுபெரும் தந்தை 2ம் Karekin அவர்கள், உறுதியான மனத்துடன், மிகுந்த நம்பிக்கை கொண்டு வாழுமாறு ஆர்மேனிய மக்களைக் கேட்டுள்ளார்.
தாயகத்துக்காக மறைசாட்சி வாழ்வைத் தேர்ந்தெடுத்த ஆர்மேனிய மக்களுக்குப் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வு, வருகிற ஏப்ரல் 23ம் தேதியன்று இடம்பெறும் என்றும் தனது சுற்றுமடலில் கூறியுள்ளார் முதுபெரும் தந்தை 2ம் Karekin.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.