2014-12-29 16:35:11

திருத்தந்தை : தத்தா பாட்டிகளே குடும்பங்களின் வேர்


டிச.29,2014. அன்பின் உன்னத கனியான ஒவ்வொரு குழந்தையும், வாழ்வை மாற்றியமைக்கவல்ல ஓர் அற்புதம் என இஞ்ஞாயிறன்று திருக்குடும்ப திருவிழாவையொட்டி தான் சந்தித்தக் குடும்பங்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியக் குடும்பங்களை ஒன்றிணைத்துக் கொண்டுவரும் அமைப்பின் பத்தாம் ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை ஞாயிறன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுயநலக் கொள்கைகளால் காயமுற்றிருக்கும் இவ்வுலகில் ஒருமைப்பாடு மற்றும் பகிர்வைக்கொண்ட பெரியக் குடும்பங்கள் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றன என்றார்.
தாத்தா பாட்டிகளை வேராகவும், பெற்றோரை அடிமரமாகவும் கொண்டு விளங்கும் குடும்பங்கள், ஒருமைப்பாடு, ஒன்றிப்பு, நம்பிக்கை, ஆதரவு, பாதுகாப்பு, மகிழ்வு மற்றும் நட்புணர்வில் திளைத்து, குழந்தைகளின் வளர்ச்சியில் பங்குகொள்கின்றன எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
கல்விப் பங்களிப்பு, ஒழுக்கரீதி மதிப்பீடுகள், விசுவாசம் போன்றவற்றில், ஒவ்வொரு குடும்பத்திலும் தாத்தா பாட்டிகளின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து ஏற்கவேண்டும் எனவும் விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.