2014-12-29 16:34:23

இளையோருக்கும் முதியோருக்கும் இடையே நிலவும் உறவு ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கியம்


டிச.29,2014. வேலைவாய்ப்பின்மை முதல் ஒன்றிப்பின்மை வரை பல்வேறு சவால்களை எதிர்நோக்கிவரும் குடும்பங்களுக்காக செபிக்குமாறு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட திருக்குடும்ப திருவிழாவையொட்டி தன் கருத்துக்களை நண்பகல் மூவேளை செப உரையில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இத்தகைய வேளைகளில் குடும்பங்களின் மீட்பு மற்றும் கருணையின் ஒளி திருக்குடும்பத்திலிருந்து வருகிறது என்றார்.
உலகில் துன்புறும் குடும்பங்களுக்கு செபிக்கும்படி அழைப்புவிடுத்த திருத்தந்தை, தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த மக்களோடு இணைந்து செபிக்கவும் செய்தார்.
இஞ்ஞாயிறு நற்செய்தியில் இடம்பெறும் 'இயேசு எருசலேம் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி’ குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருக்குடும்பம் குறித்து மற்றவர்களுக்குத் தெரியவில்லை எனினும், வயதில் முதிர்ந்த சிமியோனும் அன்னாவும் இயேசுவை மெசியாவெனக் கண்டுகொண்டனர் என்றார்.
இங்கு குழந்தை இயேசுவைத் தாங்கிய இளம்தம்பதியும், வயதில் முதிர்ந்த இருவரும் கோவிலில் சந்திக்கின்றனர் என்பது, இரு தலைமுறைகளை ஒன்றிணைய வைக்கும் இயேசுவின் அருஞ்செயல் என்ற திருத்தந்தை, தூரம், நம்பிக்கையின்மை, தனிமை ஆகியவற்றை வெற்றிகண்டு, அன்பின் அடிப்படையில் குடும்பங்களை இணைப்பது இயேசுவே எனவும் எடுத்துரைத்தார்.
எருசலேம் கோவிலில் இடம்பெற்ற இச்சந்திப்பு, நமக்கு ஒரு குடும்பத்தில் தாத்தா பாட்டிகளின் முக்கியத்துவத்தையும், இளையோருக்கும் முதியோருக்கும் இடையேயான உறவு ஒரு சமூகத்தின் மற்றும் திருஅவையின் வளர்ச்சிக்கு எத்தனை முக்கியத்துவம் நிறைந்தது என்பதையும் எடுத்துரைக்கின்றது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிமியோன், அன்னா என்ற இந்த இரு முதியோர்கள் வழி நாம் இவ்வுலகின் அனைத்து தாத்தா பாட்டிகளுக்கும் நம் பாராட்டுக்களை வழங்குவோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாசரேத்தின் திருக்குடும்பத்தைப்போல், இயேசு குடும்பத்தின் மையமாகும்போது ஒவ்வொரு குடும்பமும் புனிதமாகிறது என உரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.