2014-12-27 14:25:45

புனிதரும் மனிதரே - பேராலயத்தில் கொலையுண்ட பேராயர் (St Thomas Becket)


அழகும் அறிவும் நிறைந்த இளையவர் தாமஸ், நன்கு உடையணிந்து, வேட்டையாடி, நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இங்கிலாந்து அரசர், இரண்டாம் ஹென்றி அவர்கள், இளையவர் தாமஸின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவ்வேளையில், Canterbury பேராயர் மரணம் அடைந்ததால், தன் நண்பர் தாமஸை அப்பதவியில் அமர்த்த அரசர் பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். தன் நண்பரைப் பேராயராக மாற்றினால், கத்தோலிக்கத் திருஅவையின் மீது, குறிப்பாக, திருஅவை பெற்றிருந்த செல்வங்கள் மீது தன் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று அரசர் கனவு கண்டார். தாமஸ் அவர்கள் எவ்வளவோ மறுத்தும், அவரைப் பேராயராக உயர்த்தும் முயற்சியில் அரசர் வெற்றி கண்டார்.
பேராயராகப் பொறுப்பேற்றதும், தாமஸ் பெக்கெட் அவர்களின் வாழ்வு பெரிதும் மாறியது. தன் செல்வமனைத்தையும் விற்று, வறியோருக்கு வழங்கிய பேராயர் தாமஸ் அவர்கள், ஒரு துறவு மடத்தில் வாழச் சென்றார். திருஅவை சொத்துக்கள் மீது, அரசர் வரி விதித்ததை, பேராயர் தாமஸ் அவர்கள் வன்மையாகக் கண்டனம் செய்தார். திருஅவை பதவிகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில் அரசர் தலையிடுவது தவறு என்றும் பேராயர் துணிந்து கூறினார்.
அரசர் 2ம் ஹென்றி, அவரைக் கொல்லவிரும்பியதால், பேராயர் தாமஸ் அவர்கள், ஆறு ஆண்டுகள் பிரான்ஸ் நாட்டில் ஒரு துறவுமடத்தில் மறைந்த வாழ்வை மேற்கொண்டார். பேராயரும், அரசரும் திருத்தந்தையிடம் மேல்முறையீடு செய்தபோது, திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர் அவர்கள், பேராயரை ஆதரித்து, அரசரைக் கண்டித்தார். இதற்குப் பின்னர், பேராயர் தாமஸ் அவர்கள் இங்கிலாந்துக்குத் திரும்பினார்.
அரசர் 2ம் ஹென்றியின் மகனுக்கு முடிசூட்டு விழா நடைபெற்றபோது, பெராயருக்குப் பதிலாக, வேறு ஆயர்களை அழைத்து, அரசர் முடிசூட்டு விழாவை நடத்தினார். இந்த முடிசூட்டு விழாவில் கலந்துகொண்ட ஆயர்களை திருஅவையிலிருந்து விலக்கிவைப்பதாக திருத்தந்தை அவர்கள் முடிவெடுத்தபோது, பேராயர் தாமஸ் அவர்கள் இந்த முடிவை, பெரிதும் வரவேற்றார்.
பேராயரிடம் ஏற்பட்ட மாற்றங்களை ஏற்றுகொள்ள முடியாத அரசர், ஒருமுறை தன் தளபதிகளோடு இருந்தபோது, "இந்த அருள்பணியாளரின் தொல்லைகளிலிருந்து என்னை யாரும் விடுவிக்க மாட்டார்களா?" என்று ஆத்திரத்தில் கத்தினார். அவரைச் சுற்றிநின்ற தளபதிகளில் நால்வர் உடனே கிளம்பி, பேராயரைத் தேடிச் சென்றனர். அவர் கோவிலில் செபித்துக் கொண்டிருப்பதை அறிந்து, அங்கு சென்று, பீடத்திற்கருகே அவரைக் கொன்றனர். இது நிகழ்ந்தது, 1170ம் ஆண்டு, டிசம்பர் 29ம் தேதி.
1173ம் ஆண்டு, பேராயர் தாமஸ் பெக்கெட் (St Thomas Becket) அவர்கள் புனிதராக உயர்த்தப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு, அரசர் 2ம் ஹென்றி அவர்கள், பொதுமக்கள் முன்னிலையில் தன் குற்றங்களுக்கு மன்னிப்பு கேட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.