2014-12-26 15:53:08

மியான்மாரில் அமைதி மற்றும் சமய சகிப்புத்தன்மைக்கு அழைப்பு


டிச.26,2014. மியான்மாரின் உள்நாட்டுக் கலவரத்தின்போது விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்ட அந்நாட்டின் முதல் புனிதர்களின் நினைவைக் கொண்டாடும் தலத் திருஅவை, அந்நாட்டில் அமைதி மற்றும் சமய சகிப்புத்தன்மைக்கு அழைப்பு விடுத்து வருகிறது
மியான்மாரில் 1950ம் ஆண்டில் கொல்லப்பட்ட Isidore Ngei Ko Lat என்ற மறைக்கல்வி ஆசிரியர், அந்நாட்டின் இராணுவ ஆட்சி காலத்தில் பல ஆண்டுகள் மறக்கப்பட்டிருந்தாலும், அவர் கடந்த மே மாதத்தில் புனிதர் என அறிவிக்கப்பட்டிருப்பது அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவையில் ஓர் உந்துதலைக் கொடுத்துள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
மேலும், கடந்த மாதத்தில் யாங்கூன் அன்னைமரியா பேராயத்தில் அந்நாட்டில் கத்தோலிக்கம் பரவத் தொடங்கியதன் 500ம் ஆண்டும் கொண்டாடப்பட்டது.
1497ம் ஆண்டில் வாஸ்கோட காமா இந்தியாவுக்குக் கடல்வழியைக் கண்டுபிடித்த பின்னர், போர்த்துக்கீசிய அரசு தூர கிழக்கு நாடுகளுக்குத் தனது மறைபோதகர்களை தங்களின் படைவீரர்களுக்கு ஆன்மீக வழிகாட்டிகளாக அனுப்பியது. 1510ம் ஆண்டில் மியான்மாரில் போர்த்துக்கீசிய மறைபோதகர்களால் கத்தோலிக்கம் பரவியதாகச் சொல்லப்படுகிறது.

ஆதாரம் : AFP







All the contents on this site are copyrighted ©.