2014-12-26 15:52:44

மரண தண்டனை நன்னெறிக்குப் புறம்பானது, ஜகார்த்தா பேராயர்


டிச.26,2014. இந்தோனேசியாவில் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அரசுத்தலைவர் Joko Widodo அவர்களின் கொள்கைக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார் அந்நாட்டுப் பேராயர் ஒருவர்.
இவ்வாண்டு முடிவதற்குள் ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கும் அரசுத்தலைவர் Joko அவர்களின் திட்டத்தைக் குறை கூறியுள்ள ஜகார்த்தா பேராயர் Ignatius Suharyo அவர்கள், ஒரு மனிதரின் வாழ்வைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்றும், திருஅவையின் போதனை மரண தண்டனையை அனுமதிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.
மரண தண்டனை வழங்குவது, குற்றங்களைக் குறைக்கும் என்ற கொள்கை நிரூபிக்கப்படவில்லை என்றும், இப்பழக்கம் நன்னெறிப்படி தவறானது என்றும் கூறியுள்ளார் பேராயர் Suharyo.
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தோனேசியாவில், கொலை, கடும் கொள்ளை, பயங்கரவாதம், போதைப்பொருள் வர்த்தகம், தேசத்துரோகம் உட்பட பல கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. தற்சமயம் அந்நாட்டில் 64 போதைப்பொருள் வர்த்தகர்கள் உட்பட 136 மரண தண்டனை கைதிகள் உள்ளனர்.
மேலும், இந்தோனேசிய அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள Amnesty International அனைத்துலக மனித உரிமைகள் கழகம், மரண தண்டனை நிறைவேற்றும் பழக்கம் இரத்து செய்யப்படுமாறு வலியுறுத்தியுள்ளது.
இன்று உலகில் 140 நாடுகள் மரண தண்டனை நிறைவேற்றும் பழக்கத்தை நிறுத்தியுள்ளன.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.