2014-12-26 15:51:32

திருத்தந்தை : கிறிஸ்தவரின் வாழ்வு விசுவாசத்தோடு ஒத்திணங்கிச் செல்ல வேண்டும்


டிச.26,2014. கிறிஸ்துவுக்குச் சான்று பகருவதற்காகப் பாகுபடுத்தப்படும் மக்கள் அனைவரையும் இன்று சிறப்பாக நினைவுகூருவோம் என்றும், இக்காலத்திய மறைசாட்சிகளின் தியாகங்களுக்கு நன்றி கூறுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவத்தின் முதல் மறைசாட்சியான புனித ஸ்தேவான் விழாவாகிய இவ்வெள்ளியன்று நண்பகல் மூவேளை செப உரைய வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் மனிதரின் தவிர்க்க முடியாத உரிமையாகிய சமய சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட நம்மை அர்ப்பணிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார்.
கிறிஸ்துவ விசுவாசத்திற்காகப் பாகுபடுத்தப்படும் மக்கள், இந்தச் சிலுவையை அன்போடு சுமந்தால் கிறிஸ்மஸ் பேருண்மையில் அவர்கள் நுழைகின்றார்கள் என்றும், இம்மக்கள் இயேசு மற்றும் திருஅவையின் இதயத்தில் இருக்கின்றார்கள் என்றும் இவர்களுக்குத் தான் கூற விரும்புவதாகவும் கூறினார் திருத்தந்தை.
ஒவ்வொரு கிறிஸ்தவரும் எல்லாச் சூழல்களிலும் தங்கள் வாழ்வை, தாங்கள் அறிவிக்கும் விசுவாசத்தோடு ஒத்திணங்கிச் செல்வதாக அமைக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இந்நாளைய நற்செய்தி வாசகம் பற்றிய சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டார்.
வன்முறை அன்பாலும், மரணம் வாழ்வாலும் மேற்கொள்ளப்படும் என்றுரைத்த திருத்தந்தை, இயேசுவை உண்மையிலேயே நம் வாழ்வில் வரவேற்பதற்கு, தாழ்மையில் சான்று பகர்தல், அமைதியான சேவை, காலத்தின் ஓட்டத்திற்கு எதிராகப் பயமின்றிச் செல்லுதல் ஆகிய நற்செய்தியின் பாதையில் நாம் செல்ல வேண்டும், இப்பாதையில் கிறிஸ்மஸ் புனித இரவின் மகிழ்வு கிடைக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.