2014-12-26 15:52:14

சுனாமிப் பேரிடரின் பத்தாம் ஆண்டு நினைவு


டிச.26,2014. சுனாமிப் பேரிடர் இடம்பெற்று பத்தாண்டுகள் ஆகியும், வேதனை உணர்வும், அச்சமும் பாதிக்கப்பட்ட அம்மக்களைவிட்டு இன்னும் நீங்கவில்லை என்று இலங்கை ஆயர் ஒருவர் கூறினார்.
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்ற பத்தாம் ஆண்டு நிறைவு இவ்வெள்ளியன்று உலகில் கடைப்பிடிக்கப்பட்டவேளை, இப்பேரிடரால் அதிகம் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் மட்டும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்தனர் என்றும், அப்பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறிய ஆயர், சீரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றபோதிலும், மக்களில் சுனாமி ஏற்படுத்திய தாக்கங்கள் இன்னும் அகலவில்லை என்று கூறினார்.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்திய நேரம் காலை 6.30 மணியளவில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ., ஆழத்தில், 9.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த 2 மணி நேரத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஏறக்குறைய 12 நாடுகளில் பேரலைகள் எழும்பி கடற்கரைப் பகுதிகளை நீரில் மூழ்கடித்தன. இதில் 2 இலட்சத்து 28 , 000 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் உயிரிழந்தனர். இந்தப் பேரலைகள் 20 முதல் 30 மீட்டர் உயரம் வரை எழும்பின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.