2014-12-26 06:07:00

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று திருத்தந்தை வழங்கிய ‘ஊர்பி எத் ஓர்பி’ எனப்படும் ‘ஊருக்கும் உலகுக்கும்’ வாழ்த்துச்செய்தி


டிச.25,2014. அன்பு சகோதர சகோதரிகளே, கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.
இறைமகனும் உலக மீட்பருமான இயேசு நமக்காகப் பிறந்துள்ளார்.
முற்கால இறைவாக்குகளின் நிறைவாக பெத்லகேமில் கன்னியிடம் பிறந்துள்ளார்.
அந்தக் கன்னியின் பெயர் மரியா, அவர் யோசேப்பின் மனைவி.
இவர்கள் எளிமையான மக்கள், கடவுளின் நன்மைத்தனத்தில் முழு நம்பிக்கைக் கொண்டவர்கள், இவர்கள் இயேசுவை ஏற்று, அவரைக் கண்டுகொண்டவர்கள். அவ்வாறே, தூய ஆவியானவர், பெத்லகேமின் இடையர்களுக்கு ஒளியூட்டியதால், அவர்களும் மாடடைக் குடிலுக்கு வந்து குழந்தையை  வணங்கினர். அதன்பின்னர் தூய ஆவியானவர், முதியோர்களான சிமியோனையும் அன்னாவையும் எருசலேம் கோவிலில் வழி நடத்தியதன்மூலம், அவர்களும் மெசியாவான இயேசுவைக் கண்டுகொண்டனர். 'மக்கள் அனைவரும் காணுமாறு நீர் (இறைவன்) ஏற்பாடு செய்த மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன' ' (லூக். 2,30) என உரைத்தார் சிமியோன். 
ஆம், சகோதரர்களே! இயேசுவே ஒவ்வொரு மனிதருக்கும், மனித குலத்திற்கும் மீட்பர்.
ஈராக்கிலும்  சிரியாவிலும் வாழும் சகோதர சகோதரிகளை கண்ணோக்குமாறு உலகின்  மீட்பராம் அவரிடம் வேண்டுகிறேன். நீண்டகாலமாக தொடரும் மோதல்களின் விளைவுகளால் இம்மக்கள் துன்புறுகின்றனர். இன மற்றும் மதக்காரணங்களுக்காக பெரும் சித்ரவதைகளை அனுபவிக்கின்றனர். கிறிஸ்மஸ் இவர்களுக்கு நம்பிக்கையைக் கொணரட்டும். இதுபோல், அகதிகள், நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தோர், குழந்தைகள், பெரியோர், முதியோர் என பல  பகுதிகளிலும், உலகம்  முழுமையும் குடிபெயர்ந்துள்ள  மக்கள் குறித்தும் எண்ணிப் பார்க்கிறேன். அக்கறையின்றி மௌனமாக இருப்பவர்களாலும், வரவேற்க மறுப்பவர்களாலும் இம்மக்கள் துன்புறுகின்றனர். இவ்வாறு துன்புறும் அனைவரும், இந்தக் கடுங்குளிரை தாங்குவதற்கும், தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி மாண்புடன் வாழ்வதற்கும் தேவைப்படும் உதவிகளைப் பெறட்டும். இறைவன் இவர்களின் இதயங்களை நம்பிக்கை நோக்கித் திறப்பதுடன், மத்தியக்கிழக்குப்பகுதி முழுமைக்கும் அமைதியை வழங்கட்டும். தான் பிறந்ததால்  ஆசீர்வதிக்கப்பட்ட  பூமியிலிருந்து துவங்கி, இஸ்ராயேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை உருவாக்க விழைவோரின் முயற்சிகளுக்கு  இறைவன் உதவட்டும்.
உலக மீட்பராம் இயேசு, உக்ரைனில் துன்புறும் மக்கள்மீது தன் கண்களைத் திருப்பி, இந்த அன்புநிறை நாடு, பதட்டநிலைகளை வெற்றிகொள்ளவும், பகைமை, வன்முறைகளை வெற்றிகொண்டு,  சகோதரத்துவம் மற்றும் ஒப்புரவின் பாதையை தேர்ந்துகொள்ளவும் உதவுவாராக. 
மீட்பராம்  கிறிஸ்துவே,  நைஜீரியாவுக்கு அமைதியைப் பரிசாக அளித்தருளும். இங்கு அதிகம் அதிகமாக இரத்தம்  சிந்தப்பட்டு,  எண்ணற்ற மக்கள், தங்கள் சொந்தங்களிலிருந்து பறிக்கப்பட்டு, பிணையக் கைதிகளாகியுள்ளதுடன், கொலையும் செய்யப்பட்டுள்ளனர். ஆப்ரிக்காவின் ஏனையப் பகுதிகளுக்கும்  அமைதித் தேவைப்படுகின்றது. குறிப்பாக, லிபியா, தென் சூடான், மத்திய ஆப்ரிக்க  குடியரசு, கங்கோ ஜனநாயக்கக்குடியரசின் பல  பகுதிகள் என் நினைவுக்கு வருகின்றன. ஆப்ரிக்காவின் ஏனையப் பகுதிகளுக்கும் அமைதி தேவைப்படுகின்றது. இப்பகுதிகளில் அரசியல் பொறுப்புடைய அனைவரிடமும் ஒன்று கேட்கிறேன். பேச்சுவார்த்தைகளின் மூலம்  எதிர்ப்புகளை  வெற்றிகொண்டு, நீடித்த சகோதரத்துவ இணக்கவாழ்வைக் கட்டியெழுப்புவதில் இவர்கள் ஈடுபடுவார்களாக. 
வன்முறையாலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாலும், ஆள் கடத்தல்களாலும், ஆயுதம் ஏந்த வைக்கப்படுவதாலும் பாதிக்கட்டுள்ள எண்ணற்றக் குழதைகளை, இறைவா, நீர் காப்பாற்றியருளும். கடந்த வாரம் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆறுதலை வழங்கியருளும் இறைவா. நோயால் துபுன்புறுவோருக்கு ஆறுதலாக இருந்தருளும், குறிப்பாக, எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதிலும் லைபீரியா, சியேரா லியோன்,  கினி ஆகிய நாடுகளில் நோயுற்றிருப்போருக்கும், அவர்கள் குடும்பங்களுக்கும், அச்சமின்றி, அயராது உதவிகளை வழங்கிவரும் மக்களுக்கும் இதயப்பூர்வமான ஊக்கத்தை வழங்கும் அதேவேளை, தேவையான சிகிச்சைகளையும், பராமரிப்பையும்  உறுதிச்செய்ய வேண்டும் என்ற என் விண்ணப்பத்தையும் புதுப்பிக்கின்றேன்.
என் எண்ணங்கள் இன்று குழந்தைகள் பக்கம் திரும்புகின்றன. ஆம், கொல்லப்படும், தவறாக நடத்தப்படும் குழந்தைகளை நோக்கி. அதேவேளை, பிறக்கும்முன்னரே இறக்கும் குழந்தைகளையும் எண்ணிப்பார்க்கிறேன். உலகின் சுயநலக் கொள்கைகளால், தங்கள் பெற்றோரின் அன்பை உணர்வதற்கு முன்னரே இவர்கள் உயிரிழக்கின்றனர். பல குழந்தைகள், போராலும், சித்திரவதைகளாலும், தவறாகப் பயன்படுத்தப்பட்டதாலும் நம் கண்முன்னே, நம்முடைய மௌன சம்மதத்தால் உயிரிழந்துள்ளனர். இன்றும், இறைமகன் பிறந்த மண்ணில், குழந்தைகள் சின்னாபின்னமாகின்றனர். இக்குழந்தைகளின் சக்தியற்ற மௌனம், பல ஏரோதுகளின் வாள்களையும் மீறி, அலறுகின்றது. இன்றைய ஏரோதுகள் முகாமிட்டிருப்பது, இக்குழந்தைகளின் இரத்தத்தில் தெரிகிறது. இந்த கிறிஸ்மஸ் விழாவில் எண்ணற்ற கண்ணீர்த் துளிகள் உள்ளன, குழந்தை இயேசுவின் கண்ணீர்த் துளிகளும் அதில் இணைந்துள்ளன. 
அன்பு சகோதர சகோதரிகளே!  தூய ஆவியானவர் நம் இதயங்களை ஒளிர்விக்கின்றார்,  அதன் வழியே நாம் குழந்தை இயேசுவை கண்டுகொள்கிறோம். இவர் பெத்லகேமில் கன்னிமரியிடம் பிறந்தார். இவரே, இறைவனால் நம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட  மீட்பு. இம்மீட்பு இவ்வுலகின் ஒவ்வொருவருக்கும், அனைவருக்கும் உரித்தானது. விடுதலையும் பணிவிடையும் கொண்ட கிறிஸ்துவின் வல்லமை, போர்களாலும், சித்ரவதைகளாலும், அடிமைத்தனங்களாலும் துன்புறும் எண்ணற்ற இதயங்களில் செவிமடுக்கப்படட்டும். உலகம் சார்ந்த வழிகளிலும் அக்கறையின்மையிலும் ஊறிப்போயிருக்கும் எண்ணற்ற இதயங்களின் கடினத்தன்மையை, தாழ்ச்சியின்  துணைகொண்டு விளங்கும் இந்த தெய்வீக வல்லமை அகற்றட்டும். ஆயுதங்களை கலப்பைகளாகவும், அழிவினை ஆக்கச்சக்தியாகவும், வெறுப்பை அன்பாகவும்  மாற்றியுள்ளது, இறைவனின் மீட்பு வல்லமை. 
ஆகவே நாம் மகிழ்வுடன் கூறமுடியும், 'உம்  மீட்பை எம்  கண்கள் கண்டுகொண்டன'. 
அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.