2014-12-25 14:07:20

கிறிஸ்மஸ் இரவுத் திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


டிச.25,2014. காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்: சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. (எசாயா 9:2)
ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது.(லூக்கா 2:9)
ஆழ்ந்த இருளை ஊடுருவிச் செல்லும் ஒளியாக மீட்பர் பிறந்துள்ளதை இன்றைய வழிபாடு நமக்கு உணர்த்துகிறது. ஆண்டவரின் பிரசன்னம், தோல்வியின் சுமை, அடிமைத்தனத்தின் வருத்தம் ஆகியவற்றை நீக்கி, மக்கள் நடுவே, மகிழ்வையும், ஆனந்தத்தையும் உருவாக்குகிறது.
இவ்வுலகம் இருளால் சூழப்பட்டிருக்கும் இவ்வேளையில், நாம் விசுவாசத்தின் சுடரால் ஈர்க்கப்பட்டு, கடவுளின் இல்லத்திற்கு வந்துள்ளோம். குழந்தையாய்ப் பிறந்துள்ள இந்த ஆதவனைத் தியானிக்க நம் உள்ளங்களைத் திறப்போம்.
காலத்தின் துவக்கத்திலிருந்தே இருள் இவ்வுலகை மூடிவந்துள்ளது. தன் உடன்பிறப்பின் மேல் கொண்ட பொறாமையால், காயின், ஆபேலைக் கொன்ற நாள் முதல், வன்முறை, வெறுப்பு, போர், அடக்குமுறை ஆகிய தீமைகளால் மனித வரலாறு காயமடைந்துள்ளது.
இந்த வரலாற்றுப் பாதையில், பொறுமையுடன் காத்திருக்கும் தந்தையின் அன்பு, இருளையும், அநீதியையும் வெல்லும் வகையில் ஒளிர்கின்றது. பொறுமையிழந்து வெடிப்பது விண்ணகத் தந்தையின் குணம் அல்ல. காணாமற்போன மகனின் வருகைக்காகக் காத்திருந்த தந்தையைப்போல, அவர் காத்திருப்பவர்.
இறைவாக்கினர் எசாயா முன்னறிவித்த ஒளி, பெத்லகேமில் பிறந்து, மரியா மற்றும் யோசேப்பு ஆகியோரின் கரங்களில் தவழ்ந்தது. இடையர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் (லூக்கா 2:12) என்று தூதர்கள் அறிவித்தனர். அவர்கள் சொன்ன 'அடையாளம்' கடவுள் கொண்ட தாழ்ச்சியின் மிகத்தாழ்ந்ததோர் அடையாளம். உலகினர் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த கடவுளின் மென்மையான குணம், இவ்வகையில் வெளியானது.
குழந்தையாகப் பிறந்து, தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டுள்ள இக்குழந்தையைப்பற்றி சிந்திப்பதற்கு நாம் அழைக்கப்படுகிறோம். நாம் இறைவனைத் தேடிச் செல்வதற்குப் பதில், இறைவன் நம்மைத் தேடி வருவதை நாம் உணர்கிறோமா? நம்மை அவர் தேடிக் கண்டுபிடிக்க அனுமதிக்கிறோமா?
மாடடையும் தொழுவத்தில் பிறந்துள்ளவர், தற்பெருமை கொண்டோரைத் தேடாமல், எளிய மக்களைத் தேடிச் சென்றதைச் சிந்திக்கிறோம். இந்தத் தொழுவத்தை நெருங்கி வந்து, "மரியே, எங்களுக்கு இயேசுவைக் காட்டும்" என்று கன்னித்தாயை வேண்டுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.